×

ரூ20 கோடி சொத்து அபகரிப்பு புகார்; அதிமுக ஒன்றிய தலைவர் வீட்டில் சிபிசிஐடி அதிரடி சோதனை: மன்னார்குடியில் பரபரப்பு

மன்னார்குடி: சொத்து அபகரிப்பு புகார் தொடர்பாக மன்னார்குடியில் அதிமுக ஒன்றிய தலைவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கர்த்தநாதபுரத்தை சேர்ந்தவர் ரோஸ்லின். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மாமியாரான ஞானம்பாள் பெயரிலான ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து ேமாசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவரான அதிமுகவை சேர்ந்த மனோகரன்(58) உள்ளிட்ட 10 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து 2017ம் ஆண்டு திருவாரூர் எஸ்பியிடம் புகார் அளித்தேன். அதன்பேரில் மனோகரன் உட்பட 10 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ரோஸ்லின் மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 27ம் தேதி நடந்தது. நீதிபதி சந்திரசேகரன் விசாரணை நடத்தி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை இப்போது சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

மன்னார்குடி கனகாம்பாள் கோயில் தெருவில் உள்ள மனோகரன் வீட்டுக்கு தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி அன்பழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் 2 கார்களில் இன்று காலை 7 மணிக்கு வந்தனர். பின்னர் மனோகரன் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிமுக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ரூ20 கோடி சொத்து அபகரிப்பு புகார்; அதிமுக ஒன்றிய தலைவர் வீட்டில் சிபிசிஐடி அதிரடி சோதனை: மன்னார்குடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : CBCID ,AIADMK union ,Mannargudi ,CBCID police ,AIADMK ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...