×

துர்க்கை வழிபட்ட திருத்தலங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தமிழகச் சிவாலயங்கள் அனைத்திலும் துர்க்கை, கருவறைக் கோட்ட தேவதையாக விளங்குகிறாள் என்றால், சில சிவாலயங்களில் அவளுக்குத் தனிச்சந்நதி அமைக்கப் பட்டிருப்பதையும் காண்கிறோம். இவற்றில் அவள் கோலாகலமாக வீற்றிருக்கின்றாள். இத்தகைய ஆலயங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

கச்சியழகி

சிவவாசம் என்றும் பூலோகக் கயிலாயம் என்றும் அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட துர்க்கை ஆலயங்கள் அமைந்திருந்தன. இவற்றின் தலைமைத் தானமாக அமைந்தது கச்சபேசத்துள் அமைந்துள்ள துர்க்காதேவி கோயிலாகும். கச்சபேஸ்வரர் ஆலயத்துள் கொடி மரத்தின் முன்னே அமைந்துள்ள அகன்ற முற்றம், பஞ்சந்தி என்று அழைக்கப்படுகின்றது. இங்கு விநாயகர்த் துர்க்கை, ஐயனார், சூரியன், பைரவர் ஆகிய ஐவருக்கும் தனித்தனியே சிற்றாலயங்கள் உள்ளன. இவற்றுள், துர்க்கை ஆலயம் தனிச்சிறப்புடன், மாடக் கோயிலாகத் திகழ்கின்றது. கருவறைக்கு முன்பாக உள்மண்டபம் மகாமண்டபம், முகமண்டபம் ஆகியவை உள்ளன.

கருவறை மீது அழகிய விமானம் உள்ளது. தெற்கு நோக்கிய கருவறையில், பெரிய அழகிய திருவுருவமுடன் துர்க்கை விளங்குகின்றாள். திருமணத் தடை, கடன் தொல்லை, புத்திரப் பேரின்மை முதலியன நீங்க, இங்கே சிறப்புப் பூசைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்படுகின்றன. இங்கே, உள்ள துர்க்கை, இஷ்டசித்தி தீர்த்தத்துள் மூழ்கி சிவபெருமானை வழிபட்டுப் பேறுபெற்றாள் என்று கூறப்படுகின்றது.

வேதாரண்யம் துர்க்கை

கடற்கரைத் திருத்தலமான வேதாரண்யம், திருமுறைத்தலமாகும். இங்கு மூடியிருந்த கதவினை அப்பர் பாடித்திறக்க, ஞானசம்பந்தர் பாடி அவற்றை மீண்டும் அதனை மூடினார் என்று வரலாறு கூறுகின்றது. இது, சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலயத்தின் உட்பிராகாரத்தில், வடகிழக்கு முனையில் தெற்குநோக்கியவாறு பெரிய சந்நதியில் துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அறுபத்தி நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான இதற்குச் சுந்தரி பீடம் என்பது பெயர். இங்குக் காப்புக்கயிறு அளிக்கின்றனர். ஏராளமான மக்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். ராகுகால வேலைகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும், திரளான மக்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். மஞ்சள், குங்குமம் ஆகியவை மந்திரித்து அளிக்கின்றனர். இங்கு வழிபடுவதால் பில்லி, சூன்யம், தெய்வக் குற்றங்கள் கிரகக் கோளாறுகள் முதலியன விலகுகின்றன என்பது கண்கண்ட உண்மையாகும்.

பட்டீச்சுவரத்து துர்க்கை

கும்பகோணத்திற்குத் தெற்கில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பட்டீச்சுவரம் என்ற திருமுறைத்தலமாகும். இங்கு ஞானாம்பிகை உடனாயபட்டீச்சுவரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில், வடக்கு நோக்கியவாறு பெரிய சந்நதியில் துர்க்கை எழுந்தருளியுள்ளாள். வலது முன்கரம் அபயகரமாகவும், இடதுகரம் தொடை மீதும் வைக்கப்பட்டு, அதில் கிளி ஒன்று அமர்ந்துள்ளது. வலதுபின் கரங்கள் சக்கரம், அம்பு, கத்தி ஆகியவற்றைத் தாங்க, இடது கரங்களில் சங்கு, வில், கேடயம் விளங்குகின்றன. ஒய்யாரமாக விளங்கும் அவளுக்குப் பின்புறம், வாகனமான சிங்கம் கம்பீரமாக நிற்கிறது. கல்லிலேயே பிரபாண்டலமும் உள்ளது.

பெரிய எருமைத் தலையினை பீடமாக் கொண்டு, அதன் மீது நிற்கின்றாள். சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்கும் இந்த சந்நதியில், விரைவில் திருமணம் நடக்கவும், பகைகள் விலகவும், வழக்குகளில் வெற்றி பெறவும், நல்ல குழந்தைகள் பெறவும் நேர்ந்து கொள்கின்றனர். அண்மையில், இவளுடைய சந்நதி பெரியதாக விரிவுபடுத்திக் கட்டப்பட்டதுடன், பெருஞ் செலவில் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. இங்கு நவகோடியர்ச்சனை சிறப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இவள் இங்கிருந்த சோழர்களின் மாளிகையில் எட்டாவது வாயிலில் கோயில் கொண்டிருந்தாள் என்றும், பின்னர் இங்கு எழுந்தருளி வைக்கப்பட்டாள் என்றும் கூறுகின்றனர். சிதம்பரச் செல்விசிதம்பரத்தில், சபாநாயகர் ஆலயத்துள் சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இதன் கரையில் (சிவகாமி சந்நதி கோபுரத்தையொட்டி) துர்க்கை ஆலயம் தனியே அமைந்துள்ளது. இவள் மீது பலர் தோத்திரப் பாடல்கலைப் பாடியுள்ளனர்.

ஸ்ரீசைலத்துத் தாம்பரகௌரி

ஆந்திர மாநிலத்திலுள்ள தலம் ஸ்ரீசைலமாகும். மலைகளுக்கு இடையே இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இத்தலத்தில், துர்க்காதேவி பெரிய ஆலயத்துள் எழுந்தருளியுள்ளாள். இவளை, இங்கே தாம்பரகௌரி என்று அழைக்கின்றனர். இதையொட்டி ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள அனேக சிவாலயங்களில் (உமா தேவி சந்நதிக்குப் பதிலாக) துர்க்காதேவியின் சந்நதிகளே அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உமாதேவியார் தவம்செய்தபோது, அவள் உடலிலிருந்து துர்க்கை வெளிப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இங்கே துர்க்கை அமைத்து வழிபட்ட துர்க்கா பதீசர், துர்க்கா தீர்த்தம் ஆகியன உள்ளன.

திருவண்ணாமலைச் செல்வி

உமாதேவியார், சிவபெருமானின் இடப் பாகத்தைப் பெறவேண்டி, திருவண்ணா மலையில் பவழப்பாறையின் மீது வீற்றிருந்து கடுந்தவம் செய்தாள். அப்போது அவளுக்கு மகிஷாசூரன் என்பவன் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தான். பார்வதி தேவி தன்னுடலிலிருந்து வீரசக்தியாகத் துர்க்கையைப் படைத்து, மகிஷனைக் கொன்று வருமாறு ஏவினாள். துர்க்கை, மகிஷனோடு கடும்போர் செய்து அவனைக் கொன்றாள். பின்பு, அந்த பழி தீரும்பொருட்டுத் திருவண்ணாமலைக்குக் கிழக்கில் ஒருபாறைமீது சிவலிங்கம் அமைத்து வழிபட்டாள். சிவபெருமான் அவளுக்குக் காட்சியளித்து அருள்புரிந்தார். அவள் தவம் செய்த இடத்தில் அவளுக்குத் தேவர்கள் ஆலயம் அமைத்தனர்.

அதுவே, இந்த நாளில் தனித் துர்க்கைக் கோயிலாகத் திகழ்கின்றது. தென்னகத்தில் துர்க்கைக்கு அமைந்துள்ள தனிப் பெருங்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.தென்னகத்தில் இது நன்கு பராமரிக்கப்பட்டுப் புதிய பொலிவுடன் திகழ்கின்றது. இங்கு துர்க்கை அமைத்த கட்க தீர்த்தம் என்ற சுனையும், துர்க்கேஸ்வரன் ஆலயமும் உள்ளன. துர்க்கேஸ்வரருக்கு பாபவிநாசர் என்பது பெயராகும்.

ராமேஸ்வரம் – தேவிபட்டினம்

ராமேஸ்வர வழிபாட்டின் ஓர் அங்கமாகத் திகழும் தேவிபட்டினம், துர்க்காதேவிக்குரிய சிறப்புமிக்கதலமாகும். மகிஷனைக் கொன்ற பிறகு, தேவி இங்கே வீற்றிருந்தாள். அவளுக்குத் தேவர்கள் இங்கே ஆலயம் அமைந்தனர். இது அவள் பெயரால் தேவிபட்டினம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு, அவள் நீராடவும், சிவபூஜை செய்யவும் அமைத்த தீர்த்தம் சுக்ரதீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. ராமபிரான் இதில் மூழ்கித் துர்க்கையையும், ராமனாதரையும் வழிபட்டார். இதில் மூழ்குவதால் பில்லி, பிசாசு, சூன்யம், கடன் முதலிய அனைத்துத் தொல்லைகளும் நீங்கும்.

தக்கோலப்பாவை

தக்கோலம், காஞ்சிபுரத்தினை அடுத்துள்ள தலமாகும். தேவாரப் பாடல் பெற்றபதி. இங்கே துர்க்காதேவி சிறப்புடன் எழுந்தருளியுள்ளாள். இக்கோயிலில் உள்ள கல்வெட்டு இங்கே துர்க்கை எழுந்தருளிவைக்கப்பட்டதையும், அவள் வழிபாட்டிற்கும், அவளுக்கு முன்பாக விளக்கெரிக்கவும் நிபந்தமளிக்கப்பட்ட செய்தியையும் குறிக்கின்றன. இங்குள்ள துர்க்கை குழலூதும் கண்ணனைப் போல சுவஸ்திக நிலையில் கால்களை வைத்துக் கொண்டிருக்கிறாள்.

திருவாரூர் விந்தைக் கோட்டம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் துர்க்கைக்கான பெரிய சந்நதி உள்ளது. இது புராணத்தில் விந்தைக் கோட்டம் என்று குறிக்கப்படுகின்றது. பல அசுரர்களைக் கொன்ற பாவம் தீரத் துர்க்கை இங்கே சிவபூஜை செய்தாள் என்று கூறப்படுகின்றது.

கங்கைக் கொண்ட சோழபுரம் மகிஷாசூரமர்த்தனி

சோழப் பேரரசின் உன்னத கலைச் செல்வமாகத் திகழ்ந்து வரும் கங்கைக் கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் துர்க்கைக் கென சிற்றாலயம் அமைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம். கருவறை, உள்மண்டபம் ஆகியவற்றுடன் திகழும் இக்கோயிலில், எண்கரங்களுடன் வீர நடனம் புரியும் துர்க்கையைக் காண்கிறோம். இந்த சந்நதிக்கு நேர் எதிரில், சிம்மதீர்த்தமும், நேர் பின்புறத்தில் துர்க்கைக்குரிய வன்னிமரமும் உள்ளன. மேற்படி சிம்ம தீர்த்தத்தில்தான் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றியுடன் கொண்டு வந்து, கங்கை நீரை நிரப்பினான் என்று கூறப்படுகிறது. நீர்க்கரையில் வீற்றிருப்பதால் இவள் ஜலதுர்க்கை என்று போற்றப்படுகின்றாள்.

குடவாயில் பெருந்துர்க்கை

குடவாயில் என்னும் தலம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளதாகும். இங்குள்ள ஆலயத்தில் ‘‘பெரிய நாயகி’’ என்னும் பெயரில் அம்பிகை தனி ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில், தனியாகக் கோட்டத்தில் துர்க்கையை அமைக்கவில்லை. தனிக்கோயிலிலுள்ள அம்பிகையான பெரியநாயகியையே துர்க்கையாகப் பாவித்துப் பூசனை செய்கின்றனர். இவளைப் ப்ருஹத்துர்க்கை என்றும் அழைக்கின்றனர். இப்படித் தனிச் சந்நதியில் உள்ள அம்பிகையைத் துர்க்கையாக வழிபடும் வழக்கம் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை.

(ஆந்திர, கன்னட மாவட்டங்களில் பெரும்பாலும் சிவாலயங்களில் அம்பிகை சந்நதிகளுக்குப்பதில் துர்க்கை சந்நதியை அமைத்திருப்பதைக் காண்கிறோம். இத்தலங்களில் அவள் வீரசக்தியாகவே குறிக்கப்படுகிறாள். (எ.டு) ஸ்ரீசைலத்தில் துர்க்கையாக எட்டு கரங்களுடன் அம்பிகை விளங்குகிறாள். இவளை இங்கு தாம்பரகௌரி என்று அழைக்கின்றனர். இதனை ஒத்ததான அநேக சக்தி சந்நதிகளை இப்பகுதியில் காண்கிறோம்).மேலும் துக்காச்சி திருவாரூர் முதலிய அனேக தலங்களில் துர்க்கை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளாள் என்பதை தலபுராணங்களால் அறிகிறோம்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post துர்க்கை வழிபட்ட திருத்தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Kunkumam ,turga ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...