×

மதுரை எய்ம்ஸ் டெண்டர் புகார்… ஒரே செங்கலை வைத்து எத்தனை விதமான அதிர்ச்சியை வழங்குவீர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

மதுரை: ஒரே செங்கலை வைத்து எத்தனை விதமான அதிர்ச்சியை வழங்குவீர்கள் என்று சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 4 ஆண்டுகளாக தொடங்கப்படாத நிலையில் அண்மையில் தான் அதற்கான டெண்டர் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு 6 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு 3 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சேலத்தைச் சேர்ந்த முகேஷ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

இதற்கு எதிராக 3 நிறுவங்களின் ஒன்றான லக்னோவைச் சேர்ந்த ஆர்ச்-என் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் மீது ரூ.1,528 கோடி ஊழல் புகார் உள்ளது என்றும் இந்நிறுவனம் சிபிஐ வளையத்தில் உள்ளதாகவும் ஆர்ச்-என் நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது. முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும், டெண்டர் விதிகளில் தளவு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HITES போன்ற அனுபவம் வாய்ந்த நிறுவனங்களை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆர்ச்-என் நிறுவனம் வழக்கமாக ஆன்லைனில் நடைபெறும் நிறுவன தேர்வு ஆஃப்லைனில் நடத்தப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வழக்குகள் குற்றம் பின்னணி உள்ள நிறுவனங்கள் பங்கேற்பதை தடை செய்யும் அம்சம், விண்ணப்ப படிவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ச்-என் நிறுவனம் குற்றம் சாட்டியிருக்கிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது; திட்ட ஆலோசக நிறுவனத் தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டு. சிபிஐ வளையத்தில் சிக்கியுள்ள நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதலா?. ஒரே போன் நம்பரில் 7.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு செய்ததைப் போல, ஒரே செங்கலை வைத்து எத்தனை விதமான அதிர்ச்சியை வழங்குவீர்கள்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மதுரை எய்ம்ஸ் டெண்டர் புகார்… ஒரே செங்கலை வைத்து எத்தனை விதமான அதிர்ச்சியை வழங்குவீர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,Su Venkatesan ,Madurai ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...