×

எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்..!!

சென்னை: எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 2006 – 2011ம் ஆண்டுகளில் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது செம்மண் குவாரிகளில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் உள்ளிட்டோருக்கு எதிராக 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை பதிவு செய்திருந்தது. விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கானது நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெரும் தொகை, அவாலா பரிவர்த்தனை மூலமாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக சோதனையின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல இந்த விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்டுகள் உள்ளிட்ட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 41 கோடி ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடும் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்திருந்தது.

இதனிடையே, செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, கவுதம சிகாமணிக்கு எதிராக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா பரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பான புகார் மீதான வழக்கை மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2-வது சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

The post எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : MM GP ,Gautama Chikamani ,Chennai M. GP, MP l. PA ,M. GP ,Dinakaran ,
× RELATED செம்மண் குவாரி வழக்கில் மாஜி கலெக்டர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்