×

ஆட்டை காப்பாற்ற முயன்றபோது யானை தூக்கி வீசியதில் பெண் பலி * சித்தூரில் தம்பதியை கொன்று, தமிழகத்திலும் அட்டகாசம் * 2 கும்கிகளை வைத்து மயக்க ஊசி ெசலுத்தி பிடித்தனர் காட்பாடி அடுத்த வள்ளிமலை அருகே அதிகாலை பயங்கரம்

பொன்னை, செப்.1: சித்தூரில் தம்பதியை கொன்று, தமிழகத்தில் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அதிகாலை நுழைந்த ஒற்றை யானை, வீடு முன் கட்டியிருந்த ஆட்டை மிதித்து கொன்றஐது. அப்போது ஆட்டை காப்பாற்ற முயன்ற பெண்னை யானை தூக்கி வீசியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா அடுத்த ராமாபுரம் தலித் வாடா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(59), விவசாயி. இவரது மனைவி செல்வி(54). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது காட்டில் இருந்து திடீரென வந்த ஒற்றை யானை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்தது. இதைப்பார்த்த தம்பதியினர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

அவர்களை, காட்டுயானை துரத்தியது. இருவரும் தப்பி ஓடியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே தம்பதியை யானை கால்களால் மிதித்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒற்றை யானையை துரத்தினர். பின்னர் அந்த யானை காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த பெரியபோடி நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், விவசாயி. இவரது மனைவி வசந்தா(57). இருவரும் அங்குள்ள வனப் பகுதியை ஒட்டி மலையடிவாரத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மேலும், வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் தம்பதி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் வெளியே கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் சத்தம் போட்டது. உடனே விழித்துக் கொண்ட வசந்தா வீட்டின் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது ஒரு ஆடு இறந்து கிடந்த நிலையில் காட்டு யானை ஒன்று அங்கு நின்றுகொண்டிருந்தது. இதனைப்பார்த்த வசந்தா மற்ற ஆடுகளை காப்பாற்றும் வகையில் அலறி கூச்சலிட்டுள்ளார். அப்போது யானை வசந்தாவை ஆக்ரோஷமாக துரத்தியுள்ளது. இதில் யானையின் பிடியிலிருந்து தப்பமுயன்ற வசந்தா நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே, அவரை யானை தும்பிக்கையால் அடித்து சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசி உள்ளது. இதில் தலையில் படுகாயம் அடைந்த வசந்தா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே, வசந்தாவின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த பாலகிருஷ்ணன் வீட்டின் வெளியே ஓடி வந்து பார்த்தபோது, தனது மனைவியை யானை தூக்கி வீசி கொன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து அழுதபடி கூச்சலிட்டுள்ளார்.

அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சத்தமிட்டு யானையை விரட்டியுள்ளனர். இதில் காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கிக் ெகாண்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து ஒற்றை யானையை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். மேலும் மேல்பாடி எஸ்ஐ தர்மன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சித்தூர் அருகே நேற்று முன்தினம் தம்பதியை கொன்ற யானைதான் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர், காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையில் போலீசார் அங்கு வந்து வசந்தாவின் சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் அந்த யானை தமிழக வனப்பகுதியில் இருந்து தப்பித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமாபுரம் ஏரி பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கியது தெரியவந்தது.

இதனை அடுத்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன அலுவலர் சைதன் குமார் தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் வன அலுவலர் கலாநிதி தலைமையில் 50 பேர் என்று மொத்தம் 100 பேர் கொண்ட குழுவினர், ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கியானைகளான ஜெயந்த், விநாயகா ஆகிய 2 யானைகள் மூலம், அட்டகாசம் செய்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 3 மணியளவில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மழைபெய்து வந்ததால், மாலை 4.30 மணியளவில் மற்றொரு மயக்க ஊசி செலுத்தி, கும்கியானைகள் மூலம் யானை பிடிக்கப்பட்டது. தொடர்ந்து சித்தூர் மாவட்டம் பலமனேரி பகுதியில் உள்ள யானைகள் முகாமிற்கு லாரி மூலம் பிடிபட்ட யானையை கொண்டு சென்றனர். பின்னர் திருப்பதி வனபூங்காவில் விடப்பட்டது. இதற்கிடையே, போடி நத்தம் பகுதியில் காட்டு யானை தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையில் முதற்கட்டமாக ₹50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

மேலும், காட்டு யானை மிதித்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ₹5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ஒற்றைக்காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிபட்டதால் சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி கூறுகையில், ‘துரதிஷ்டவசமாக நடந்த உயிரிழப்புக்கு இறந்த பெண்ணின் குடும்பதினரிடம் ₹50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையாதபடி பாதுகாக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.

The post ஆட்டை காப்பாற்ற முயன்றபோது யானை தூக்கி வீசியதில் பெண் பலி * சித்தூரில் தம்பதியை கொன்று, தமிழகத்திலும் அட்டகாசம் * 2 கும்கிகளை வைத்து மயக்க ஊசி ெசலுத்தி பிடித்தனர் காட்பாடி அடுத்த வள்ளிமலை அருகே அதிகாலை பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Chittoor, Tamil Nadu ,Vallimalai ,Katpadi ,Ponnai ,Chittoor ,Tamil Nadu ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...