×

2வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் கோயிலில் கூட்டம் தொடர்ந்து அலைமோதியது திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி

திருவண்ணாமலை, செப்.1: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, 2வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் தொடர்ந்து நேற்றும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகும். இங்கு, அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக இறைவன் எழுந்தருளி காட்சியளித்ததால், இங்குள்ள மலையே இறைவன் திருவடிவமாக வணங்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையை வலம் வந்து வழிபடுகின்றனர். எனவே, ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை நகரம் விழா கோலாமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் காலை 10.48 மணிக்கு தொடங்கி, நேற்று காலை 8.23 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதன்படி, பவுர்ணமி கிரிவலத்தின் இரண்டாம் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேற்றும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. நேற்று காலையுடன் கிரிவலத்துக்கு உகந்த நேரம் நிறைவடைந்த போதும், பகலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும், அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோ பூஜை முடிந்ததும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள், அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, சிறப்பு கட்டண தரிசனம், அமர்வு தரிசனம் நேற்றும் ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனம் மட்டும் ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது. அதனால், வட ஒத்தைவாடை தெரு வரை வரிசை நீண்டிருந்தது. நேற்றும் சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நேற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

The post 2வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் கோயிலில் கூட்டம் தொடர்ந்து அலைமோதியது திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி appeared first on Dinakaran.

Tags : Krivalam temple ,Avani ,Tiruvannamalai ,Krivalam ,Avani month ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...