சாத்தான்குளம், செப். 1: அமுதுண்ணாக்குடி சாலையில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் முறையாக மூடப்படாததால் விபத்து அபாயம் நிலவுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி வழியாக கொம்பன்குளம், நெடுங்குளம், கழுங்குவிளை, வேலன்புதுக்குளம் மற்றும் நெல்லை செல்வதற்கு வாகனங்கள் வந்து செல்கின்றனர். மேலும் கிராமப்புறங்களில் இருந்து சாத்தான்குளம் பகுதி வருபவர்கள் அமுதுண்ணாக்குடி சாலையை பயன்படுத்தி வந்து செல்கின்றனர். இந்நிலையில் அமுதுண்ணாக்குடி பஞ்சாயத்து சார்பில் அங்குள்ள தரைமட்ட பாலம் அருகே சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டதாக தெரிகிறது. பணி முடிந்ததும் பள்ளத்தை முழுமையாக மூடாமல் விட்டு சென்றுள்ளனர். இது சாலையின் குறுக்கே பெரும் பள்ளமாகி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இரவு நேரத்தில் இந்த பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் பார்வையிட்டு இந்த பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post அமுதுண்ணாக்குடியில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் மூடப்படாததால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.
