×

அடுத்தது ஆதித்யா

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் இறக்கி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. நிலவில் இறங்கிய லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் புகைப்படங்களை எடுத்து அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சாதனையை உலகமே வியந்து பாராட்டி வரும் நிலையில் அடுத்தகட்டத்துக்கு இஸ்ரோ சென்றுள்ளது. அதாவது செப்.2ம் தேதி சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக தனது முதல் திட்டமான ஆதித்யா-எல்1ஐ விண்ணில் செலுத்த இருக்கிறது. இந்த ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் வெளிவட்ட பகுதியில் உள்ள சோலார் கரோனா எனப்படும் சூரிய மண்டலத்தில் நிகழும் இயற்பியல் மற்றும் வானியல் நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்யும்.

7 கருவிகளை சுமந்து செல்லும் இந்த விண்கலம் சூரியனின் சுற்றுவட்டத்தில் உள்ள மின்காந்த அணு துகள்களை ஆய்வு செய்யும். அடிப்படையில் சூரியன் ஒரு நட்சத்திரம். இதற்கு 450 கோடி ஆண்டுகள் வயதாகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் சராசரி விட்டம் 14 லட்சம் கிலோ மீட்டர். இது பூமியின் விட்டத்தை விட 109 மடங்கு பெரியது என்று கூறுகிறார்கள். அதே சமயம் சூரியனின் முழு கொள்ளளவை நிரப்ப 13 லட்சம் பூமிகள் பிடிக்குமாம். பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் சூரியன் பிரகாசிக்கிறது. சூரியனின் மேற்பரப்பு 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் வெப்பமயமானது. ஆனால் மிக அதிகமான வெப்பப்பகுதி சூரியனின் மையப்பகுதியாம். அது 2.7 கோடி டிகிரிக்கு மேல் கொண்டதாகும்.

சூரியன் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆன ஒரு கோள். இதனால் இதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேகத்தில் சுழல்கின்றன. இதன் இரு துருவங்களும் ஒரு சுழற்சியை முடிக்க 36 நாட்களாகின்றன. சூரியனில் இருந்து பூமியில் விழும் ஒளிக்கதிர்கள் பல லட்சம் உயிரினங்கள் வாழ காரணமாக அமைந்துள்ளது. மேலும் சூரிய கதிர்களை வெறும் கண்களால் பார்க்கும் போது கண்களில் உள்ள அழுக்கு கரைந்து கண்ணீரில் வெளியேறி கண்பார்வை பிரகாசமடைகிறது. சூரிய ஒளியில் வைட்டமின் ‘டி’ இருப்பதால் மனித உயிர்களுக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது. இதனால் தான் ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி என்று சூரியனை புகழ்ந்து பாடினார்கள்.

சூரியனை ஆய்வு செய்ய நாசா மற்றும் ஐரோப்பா விண்வெளிக்கழகம் விண்கலங்களை ஏற்கனவே விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நாசா விண்ணில் செலுத்திய பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலம் தான் இதுவரை சூரியனுக்கு மிக அருகில் அதாவது 62 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஆய்வு செய்தது. தற்போது இந்தியா சார்பில் இஸ்ரோ அனுப்பும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் எல்1 புள்ளியில் இருந்து சூரியனை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளும். இந்த புள்ளியில் விண்கலங்கள் குறைந்த எரிவாயுவை செலவிட்டு ஸ்திரமான நிலையில் இருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரனை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்-3 ஏவி வெற்றி பெற்றது போல் ஆதித்யா-எல்1 விண்கலத்தை சூரியனுக்கு செலுத்தி வெற்றி பெற இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.

The post அடுத்தது ஆதித்யா appeared first on Dinakaran.

Tags : Indian Space Research Organization ,ISRO ,South Pole of the Moon ,Aditya ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...