×

அதானி குழுமத்தில் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டது யாருடைய பணம்? ராகுல்காந்தி கேள்வி

மும்பை: அதானி குழுமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக 2 சர்வதேச பிரபல பத்திரிக்கைகள் கட்டுரை வெளியிட்ட நிலையில், அவை யாருடைய பணம், யார் ஈடுபட்டுள்ளார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, ‘‘இந்தியாவில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு சென்றதாகவும், வெவ்வேறு இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டதாகவும் பின்னர் இந்தியாவிற்கு அந்த பணம் திரும்பி வந்ததாகவும் லண்டன் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

முதல் கேள்வியானது இந்த பணம் யாருடையது? இது அதானியுடையதா அல்லது வேறு யாருடையது? இதற்கு மூளையாக செயல்பட்டவர் கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி. இந்த பண மோசடியில் நசீர் அலி ஷபான் அஹ்லி மற்றும் சாங் சுங் லிங் ஆகிய இருவரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இரண்டாவது கேள்வி எழுகிறது. அனைத்து இந்திய உள்கட்டமைப்புக்களையும் கட்டுப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றின் மதிப்பீட்டில் விளையாடுவதற்கு இந்த இரண்டு வெளிநாட்டினர் ஏன் அனுமதிக்கப்படுகிறார்கள்?. அதானி குழும முதலீடு குறித்த விசாரணையை பிரதமர் மோடி ஏன் கட்டாயப்படுத்தவில்லை. பிரதமர் மவுனம் காப்பது ஏன்? ஜி20 தலைவர்கள் இந்தியா வருவதற்கு முன்பு இந்த பிரச்னையை தெளிவுபடுத்துவது அவசியமாகும். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

* இந்தியாவின் வளர்ச்சியால் உறுத்தல்
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பிய நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம், ‘‘இந்த செய்திகளுக்கு பின் ஜார்ஜ் சோரஸ் போன்ற சில சக்திகள் உள்ளன என்பதை நான் உறுதியாக கூறுவேன். ஒரு மென்மையான நாடாக இருந்த இந்தியா இன்று வளர்ந்து வருகின்றது. வலிமையான தேசமாக மாறியுள்ளது. இது சிலரது பார்வையை உறுத்துகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கையாளும் ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது வேலையை செய்யும். இது குறித்து எந்த அடிப்படையும் தெரியாமல் எந்த கருத்தையும் கூறக்கூடாது” என்றார்.

The post அதானி குழுமத்தில் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டது யாருடைய பணம்? ராகுல்காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Rakulkandi ,Mumbai ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...