×

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்த புயல் மொரிஷியஸ் நிறுவனம் மூலம் முறைகேடாக அதானி குழுமத்தில் முதலீடு

* 13.5 சதவீத பங்குகளை 2 பேர் மட்டுமே வாங்கியது அம்பலம்
* இந்தியாவில் இருந்து பணம் அனுப்பியது யார்?
* எல்லாம் தெரிந்தும் செபி அமைதியாக இருந்ததாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி நிறுவனத்தின் மீது மேலும் ஒரு முறைகேடு புகார் எழுந்துள்ளது. அதானி நிறுவன பங்குகளை முறைகேடாக மொரிஷியஸ் நிறுவனம் மூலம் வாங்கியதற்கான ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பங்குகளின் விலையை உயர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

குறிப்பாக வரிவிகிதம் மிக குறைவாக உள்ள நாடுகளில் போலி ஷெல் கம்பெனிகளைத் தொடங்கி அவற்றின் மூலமாக அதானி குழுமத்தில் முதலீடுகளை மேற்கொண்டு பங்கு மதிப்புகளை உயர்த்தியதாகவும், பிறகு வங்கிகளில் பெருமளவு கடன்களை வாங்கி முறைகேடான பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு புயலை கிளப்பிய நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்தன. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏ.எம்.சப்ரே தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

அதே சமயம், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடமும் விசாரிக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் நியமித்த குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கையில் அதானி குழுமத்துக்குச் சாதகமாகவே முடிவுகள் வந்தன. செபி விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதானி குழுமம் செய்த பல்வேறு பரிமாற்றங்களின் ஆதாரங்களை சேகரித்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்ட அமைப்பு (ஓசிசிஆர்பி) தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதை லண்டனை சேர்ந்த கார்டியன், பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்கள் வாயிலாக மறைமுக நிதியை பயன்படுத்தி இருவர் அதானி குழும பங்குகளை சுமார் ரூ.3500 கோடி மதிப்பிலான தொகைக்கு வாங்கியுள்ளனர். இந்த நிதி இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளது. இதை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் தைவான் நாட்டை சாங் சங்-லிங். இவர்கள் இருவரும் அதானி குடும்பத்துடன் நீண்ட காலமாக வர்த்தக தொடர்பில் இருந்துள்ளனர். மொரீஷியஸை தளமாகக் கொண்ட ‘ஒப்பெக்’ முதலீட்டு நிதிகள் மூலம் இந்த நிதி பகிரங்கமாக அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதோடு கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியுடன் தொடர்புடைய குழு நிறுவனங்களில் அவர்கள் பெருமளவு முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனங்களில் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களாகவும் இவர்கள் பணியாற்றியுள்ளனர். அதானி பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட பணிகள் மூலம் பெருமளவு பணத்தை அங்கு முதலீடு செய்துள்ளனர். பெருமளவு பணப்பரிமாற்றம் நடந்தது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெரிந்து 2014ல் வருவாய் புலனாய்வு இயக்குநரகம், செபி ஆகியவை விசாரித்துள்ளன. ஆனால் மோடி பிரதமரான பின்னர் இவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதில் எழுந்துள்ள முக்கிய கேள்விகள் வருமாறு:
* நாசர் அலி ஷபன் அஹ்லியும், சாங் சங்-லிங்கும், அதானி நிறுவனங்கள் சார்பாக செயல்படுவதை கருத்தில் கொள்ள வேண்டுமா?
* அப்படியானால், அதானி குழுமத்தில் அவர்களின் பங்கு என்பது இந்திய பங்குச்சந்தை சட்டத்தை மீறி 75 சதவீதத்திற்கும் அதிகமாக பங்கு வைத்துள்ளனர் என்பது சரியா?
* சாங் மற்றும் அஹ்லியின் முதலீடுகள் அதானி குடும்பத்திலிருந்து வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை
* ஆனால் அதானி பங்குகளில் அவர்களின் வர்த்தகம் என்பது அதானி குடும்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

* 2013ல் ரூ.66 ஆயிரம் கோடி 2022ல் ரூ.23 லட்சம் கோடி அதானி சம்பாதித்தது எப்படி?
அதானி நிறுவனம் மீது குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டத்தில் எழுப்பப்பட்டுள்ள முக்கியமான கேள்வி இதுதான். அதன் விவரம் வருமாறு: அதானி குழுமத்தின் எழுச்சி அதிர்ச்சியளிக்கிறது. மோடி பிரதமராக வருவதற்கு முந்தைய ஆண்டு 2013 செப்டம்பரில் சந்தை மூலதனத்தில் ரூ.66 ஆயிரம் மதிப்பில் இருந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் இருந்து ரூ.85 ஆயிரம் கோடி வெளியே சென்றதா?
2013ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட ரூ.85 ஆயிரம் கோடி தான் மொரிஷியஸ் நிறுவனம் மூலம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தான் 2014ல் செபி மற்றும் டிஆர்ஐ விசாரித்து உள்ளது. இதுபற்றி அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில்,’இரண்டு மொரீஷியஸ் நிதி அமைப்புகளுக்கு சுமார் ரூ.85 ஆயிரம் கோடி மோசடி பணம் அனுப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டு குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) விசாரித்தது. அப்போது எங்கள் நிறுவனத்தின் இன்வாய்சிங், வெளிநாட்டு நிதி பரிமாற்றம், பரிவர்த்தனைகள், எப்பிஐகள் மூலம் செய்த முதலீடுகள் மூலம் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று அறிவித்து விட்டது’ என்று தெரிவித்து உள்ளது.

* எவ்வளவு நிதி? எப்படி வந்தது?
குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டத்தில் வெளியான அதானி நிறுவன முறைகேடுகள் தொடர்பாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த நாசர் அலி ஷபன் அஹ்லி மற்றும் தைவான் நாட்டை சாங் சங்-லிங் இருவரும் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் நெருங்கிய கூட்டாளிகள். இவர்கள் இருவரும் தான் அதானி பங்குகளில் வெளிநாட்டு நிதியை முதலீடு செய்துள்ளனர். மேலும் அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒரே பயனாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். மொரிஷியஸ் நாட்டில் இருந்து வரும் நிதியை அதானி பங்குகளில் முதலீடு செய்வதை துபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்தால் மேற்பார்வை செய்துள்ளனர். இந்த நிறுவனம் வினோத் அதானியின் ஊழியரால் நடத்தப்படுகிறது.

சாங் சுங்-லிங் மற்றும் நாசர் அலி ஷபான் அஹ்லி ஆகியோர் மொரிஷியஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நிறுவப்பட்ட நான்கு வெளிநாட்டு நிறுவனங்கள் பெயரில் உலகளாவிய வாய்ப்புகள் நிதி (GOF) என்ற பெரிய முதலீட்டு நிதியை 2013 முதல் அதானி பங்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் (EIFF) மற்றும் எமர்ஜிங் இந்தியா மறுமலர்ச்சி நிதி (EMRF) என்ற பெயரில் இந்த நிதி அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், சிறப்புப் பொருளாதார மண்டலம், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் என்ற நிறுவனங்களில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு மே 2014 கணக்குப்படி எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் நிதியானது, அதானியின் 3 நிறுவனங்களில் ரூ.1570 கோடி மதிப்புக்கும் அதிகமான பங்குகளை வைத்து இருந்தது. அதே சமயம் எமர்ஜிங் இந்தியா மறுமலர்ச்சி நிதி வழியாக ரூ.578 கோடி மதிப்புள்ள அதானி பங்குகளில் முதலீடு செய்திருப்பதாகத் தெரிகிறது.

அதானி நிறுவன பங்குகளை வாங்கிய எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ், எமர்ஜிங் இந்தியா மறுமலர்ச்சி நிதி ஆகியவை சாங் மற்றும் அஹ்லியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து வந்த பணத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. 2014 செப்டம்பர் மாதம் சாங் மற்றும் அஹ்லிக்கு சொந்தமான 4 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த கட்டமைப்பின் மூலம் அதானி பங்குகளில் சுமார் ரூ.2100 கோடி தனியாக முதலீடு செய்துள்ளன. 2017 மார்ச் மாதம் சாங் மற்றும் அஹ்லியின் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.3500 கோடி அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதாவது அதானி நிறுவன பங்குகளை சாங் மற்றும் அஹ்லியின் நிறுவனங்கள் மட்டுமே பெற்றுள்ளன. இதனால் அதானி நிறுவனங்களில் 13 சதவீத பங்குகள் இந்த 4 நிறுவனங்களில் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாங், அஹ்லி பதில் அளிக்க மறுப்பு
அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தது தொடர்பாக கார்டியன் சார்பில் சாங் மற்றும் அஹ்லியை தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ​​அதானி பங்குகளில் தனது நிறுவனத்தின் முதலீடுகள் பற்றிய கேள்விகளுக்கு சாங் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் வினோத் அதானியுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அதே போல் கார்டியன் அழைப்பை அஹ்லி எடுத்து பதிலளிக்கவில்லை.

* எச்சரித்த டிஆர்ஐ விசாரித்த செபி
கார்டியன் வெளியிட்ட செய்தியில் ,’அதானி குழுமத்தின் சந்தேகத்திற்கிடமான பங்குச் சந்தை முதலீட்டு நடவடிக்கைக்கான ஆதாரங்களை 2014ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்றிய அரசிடம் செபி ஒப்படைத்தது. ஆனால் 2014 தேர்தலில் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு அதுபற்றி விசாரணை நடத்தப்படவில்லை. 2014ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவின் நிதிச் சட்ட அமலாக்க நிறுவனமான வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) அப்போதைய தலைவரான நஜிப் ஷா, அப்போதைய செபியின் தலைவரான உபேந்திர குமார் சின்ஹாவுக்கு இந்த முறைகேடு பற்றி ஒரு கடிதம் எழுதினார்.

அதில்,’அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் இந்தியாவில் உள்ள பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யபட்டு இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்து செபி விசாரணை நடத்தினால் தெரியும்’ என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்’ என்று கார்டியன் தெரிவித்து உள்ளது. அப்போது செபி தலைவராக இருந்த உபேந்திரகுமார் சின்ஹா தான் தற்போது அதானி வாங்கிய செய்தி நிறுவனமான என்டிடிவிக்கு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* எங்கள் குழுமத்தின் நற்பெயரை கெடுக்க வெளிநாட்டு சதி: அதானி குழுமம் விளக்கம்
குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஜார்ஜ் சோரஸ் நிதி உதவியுடன் ஆதாரமற்ற ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை புதுப்பிக்கவும் மற்றும் அதானி குழுமத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் சில வெளிநாட்டு ஊடகங்களின் ஆதரவினால் புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டவை. இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரித்து அனைத்து தகவல்கள் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு நிதி பரிமாற்றம், பரிவர்த்தனைகள் மற்றும் எப்பிஐ மூலம் முதலீடு செய்த குற்றச்சாட்டுகளில் பெரிய இழப்பு இல்லை என்பதையும், சட்டத்தின்படி தான் இந்த பரிவர்த்தனைகள் நடந்தன என்பதையும் உறுதிப்படுத்தியது என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

The post ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்த புயல் மொரிஷியஸ் நிறுவனம் மூலம் முறைகேடாக அதானி குழுமத்தில் முதலீடு appeared first on Dinakaran.

Tags : Hindenburg ,Adani Group ,Mauritius ,India ,Dinakaran ,
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...