×

இலை கட்சியின் தலையான சேலம்காரரை இயக்கும் இருவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இரட்டை லாபம் கருதி, போட்டியை தவிர்க்கும் இலை கட்சி நிர்வாகி யாரு…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘எம்பி தேர்தலை கருத்தில் கொண்டு, தாமரைக்கட்சிக்கு தங்கள் பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, தூங்கா நகரத்தில் சேலத்துக்காரர் இலைகட்சி மாநாட்டை நடத்தினார். மாநாடு முடிந்ததும் மாவட்டச் செயலாளர்களிடம் எம்பி தேர்தல், கூட்டணி குறித்தும் விவாதித்தாராம். இதில், தாமரைக் கட்சியுடன் கூட்டணி சேர வேண்டாம். வேறு வழியின்றி கூட்டணி அமைத்தாலும் தாமரைக்கட்சி கேட்கும் தொகுதிகளை கொடுக்கவே கூடாது. நமக்கு வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை தாமரைக்கட்சி தலையில் கட்டி விட வேண்டுமென ‘கட் அண்ட் ரைட்டாக’ சொன்னாங்களாம். இதற்கிடையில், வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தின் இலைக்கட்சியின் மக்கள் பிரதிநிதியான முருகப்பெருமான், ‘இம்முறை எம்பி தேர்தலில் போட்டியிட எனக்கு ஆர்வமில்லை. சீட் வேண்டுமென்றால் சொல்லுங்க, தலைமையிடம் பேசலாம். எனக்கொன்றும் பிரச்னை இல்லை’ என தன் ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம். திடீரென ஏன் இப்படி பேசுகிறார் என யோசித்தபோது, வடமாநில நதி எம்பி தொகுதியில் மீண்டும் தாமரைக்கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். தேர்தலில் போட்டியிடுவதற்காக இலைக்கட்சியில் இருந்து தாமரைக்கட்சிக்கு சென்ற மாஜி எம்எல்ஏ காய் நகர்த்தி வருகிறார். மேலும், அக்கட்சியின் மாவட்ட தலைவரும் போட்டியிடும் ஆசையில் உள்ளாராம். இதனால்தான் போட்டியிட ஆர்வம் இல்லை என்பது போல செயல்படுகிறாராம்.. எல்லாம் தாமரையின் மாயா ஜாலம் செய்யும் மாயம் என்கிறார்கள் இலை கட்சியினர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலம்காரை ஆட்டி படைக்கும் இரண்டு பேரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் புதுத்தலைவருக்கு எல்லாமுமாக இருப்பது ரெண்டு பேராம். இதில் ஒருவர் அவரது ‘சன்’னாம். முகத்தை வெளியே காட்டாமல் பின்னால் இருந்து இயங்கிட்டு இருக்காராம். யார் யாருக்கு கரன்சியை எப்படி தட்டிவிடணும் என்ற வித்தை தெரிந்தவராம். எந்த குளறுபடியும் இல்லாம குறித்த நேரத்தில் சேர வேண்டியது சரியாபோய் சேருமாம். இன்னொருவர் புளியோதரை மாநாடு நடந்த தூங்கா நகரத்தை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவராம். அவரது தந்தை அரசியலில் பழம் தின்னுகொட்டை போட்டவராம். இவரும் சேலத்து தலைவருக்கு ரொம்பவே நெருக்கமாம். தூங்கா நகரத்து கட்சி பெரும்தலைகளை எப்படி சந்திக்கணுமுன்னு சேலத்து தலைவருக்கு போட்டுக் கொடுப்பதே இவர் தானாம். விமான பயணத்தில் கூட தன் அருகிலேயே வச்சிருப்பாராம். இந்த நெருக்கத்தினால நெஞ்சை நிமிர்த்து நின்ற ரெண்டாம் கட்ட தலைவர்களே சேலத்துக்காரரின் காலில் விழுந்து ஆசி வாங்கும் நிலை ஏற்பட்டிருக்காம். கட்சி தன்னிடம் வந்ததால யாரை எங்கே வைக்கணுமுன்னு சேலத்துக்காரர் யோசிச்சிக்கிட்டு இருக்காராம். அதற்குள் அவரோடிருக்கும் நெருக்கத்தை எப்படி உடைக்கலாமுன்னு தூங்கா நகரத்து தலைகள் காய் நகர்த்திக்கிட்டு இருக்காங்களாம். அதே நேரத்தில் தன்னை ஏத்திவிட்டவர்களை எட்டி உதைக்கும் பழக்கம் கொண்டவரு எங்கள் தலைவரு. யாரும் அவரிடம் நிரந்தரமாக இருக்க முடியாது. இதில் யாரும் விதிவிலக்கல்ல என்று அவரிடம் இருந்து பாதிக்கப்பட்ட மாங்கனி மாநகரத்து ரத்தத்தின் ரத்தங்கள் அடிச்சி சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் யாருக்கு எதுக்காக ஆசை காட்டுறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புல்லட்சாமி பதவியேற்று இரண்டரை ஆண்டு முடிவடைந்துள்ளது. அவரது தற்போதையை ஆட்சியில் இடம் பெறாத அவரின் கட்சி, தாமரை மக்கள் பிரதிநிதிகள், நியமன பிரதிநிதிகள், சுயேச்சை மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு வாரிய பதவி வேண்டும் என தொடர்ந்து நச்சரித்து வர்றாங்களாம். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இது எதிரொலித்தது. அரசு சார்பு நிறுவன தலைவர்களாக தங்களை நியமித்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபகரமாக செயல்படுத்துவோம் என தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர். ஏற்கனவே தாமரை தரப்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாரிய பதவி கேட்டு புல்லட்சாமியிடம் வலியுறுத்தினாங்களாம். தேர்தல் உடன் படிக்கையின்படி தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாரிய பதவி அளிக்க வேண்டும் என இலை தரப்பும் புல்லட்சாமியை நச்சரித்து வருகிறதாம். ஆனால், புல்லட்சாமி அனைவரின் கோரிக்கையை கேட்டும், எழுதி வாங்கிவிட்டு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறாராம். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. புல்லட்சாமி கட்சி, தாமரை கட்சி கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியம். இல்லாவிட்டால் ஆளும்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக சொல்லுவாங்க. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர், எம்.எல்.ஏ.க்களை உத்வேகப்படுத்த தொகுதிகளில் வாக்கு பெற்றுத் தரும் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என தாமரை தலைமை ஆசை வார்த்தை கூறியுள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘யாரும் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று சொல்பவர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகர காவல்துறையுடன் சமீபத்தில் வடவள்ளி, துடியலூர் காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டன. இதனால், இவ்விரு ஸ்டேஷன்கள் முன்பைவிட தற்போது சுறுசுறுப்பாக இயங்க துவங்கியுள்ளன. முன்பு, புறநகர் பகுதியில் இக்காவல் நிலையங்கள் இருந்த காரணத்தால், ஆய்வாளர் முதல் கடைக்கோடி காவலர் வரை, பலரும், பலவிதமாக ஓய்வெடுத்து வந்தனர். ஏதேனும் புகார் மனுக்கள் வந்தால்கூட, அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ஈஸியாக கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து வந்தனர். ஆனால், மாநகர காவல்துறையில் இந்த பார்முலா எடுபடவில்லை. காரணம், சிட்டி போலீஸ் கமிஷனர் மற்றும் உளவுப்பிரிவு உதவி கமிஷனர் ஆகியோரது நேரடி கண்காணிப்பில் இக்காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதனால், ஆய்வாளர் முதல் காவலர் வரை அத்தனை பேரும் ஆடிப்போய் உள்ளனர். இத்தனை நாள் ரீலாக்ஸ்… ஆக பணிபுரிந்துவிட்டு, இப்போது நேரடி கண்காணிப்பு என்பது பெரும் கசப்பாக உள்ளது. இதனால், அத்தனை பேரும் திக்குமுக்காடுகின்றனர். பலர், புறநகர் பகுதிக்கு அல்லது வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதலில் சென்றுவிடலாம் என துடிக்கின்றனர். ஆனால், இதுபோன்ற விண்ணப்பங்களை ஊக்குவிக்கக்கூடாது என மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு போட்டு தடுத்துவிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சியின் தலையான சேலம்காரரை இயக்கும் இருவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : salamgarh ,Peter Uncle ,Salemgarh ,wiki Yananda ,
× RELATED டெல்லிக்கு படையெடுக்க தயாராகி வரும்...