×

ஆட்டை காப்பாற்ற முயன்றபோது யானை தூக்கி வீசியதில் பெண் பலி: அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

பொன்னை: ஆட்டை காப்பாற்ற முயன்றபோது யானை தூக்கி வீசியதில் பெண் பரிதாபமாக பலியானார். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த பெரியபோடி நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், விவசாயி. இவரது மனைவி வசந்தா (57). இருவரும் வனப் பகுதியையொட்டி உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும், வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் தம்பதி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வெளியே கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் சத்தம் போட்டது.

உடனே வசந்தா சென்று பார்த்தபோது ஆடு இறந்து கிடந்த நிலையில், காட்டு யானை ஒன்று அங்கிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் அலறி கூச்சலிட்டார். அப்போது யானை வசந்தாவை தும்பிக்கையால் அடித்து சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசி உள்ளது. இதில் தலையில் படுகாயம் அடைந்த வசந்தா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வசந்தாவின் சத்தம் கேட்டு அவரது கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் அப்பகுதி மக்கள் யானையை விரட்டியுள்ளனர். இதில் காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியது.

இதையடுத்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, சித்தூர்மாவட்ட வன அலுவலர் சைதன் குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகளான ஜெயந்த், விநாயகா உதவியுடன் சித்தூர் மாவட்டம் ராமாபுரம் கரும்புத் தோட்டத்தில் பதுங்கிய யானையை, மயக்க ஊசி செலுத்தி நேற்று மாலை 6 மணியளவில் பிடித்து திருப்பதி வனபூங்காவில் விட்டனர். இந்நிலையில், யானை தாக்கி பலியான பெண் வசந்தாவின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரமும், தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆட்டை காப்பாற்ற முயன்றபோது யானை தூக்கி வீசியதில் பெண் பலி: அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Ponnai ,Vellore district ,Gadbadi taluka Vallimalai ,Dinakaran ,
× RELATED ஊராட்சி செயலாளர், மனைவி மீது சொத்து...