×

சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார் ஜெகன் தங்கை: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரசில் இணைக்க திட்டம்

புதுடெல்லி; சோனியா, ராகுலை டெல்லியில் ஆந்திர முதல்வர் ஜெகன் தங்கை சர்மிளா சந்தித்து பேசினார். அவரது கட்சியை காங்கிரசில் இணைக்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்எஸ்ஆர் தெலங்கானாபிரதேசம் கட்சியை நடத்தி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென டெல்லி சென்ற ஒய்.எஸ்.சர்மிளா அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை அவர்களது இல்லத்தில் சென்று சந்தித்தார். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது தெரியவில்லை. இருப்பினும் ஒய்.எஸ் சர்மிளா தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து தேர்தலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சியை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்புக்குப் பிறகு சர்மிளா கூறியதாவது: சோனியா மற்றும் ராகுல் ஆகியோருடன் பல பிரச்னைகள் குறித்து விவாதித்தேன். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளாக, தெலுங்கானா மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். தெலங்கானா முதல்வர் கே.சி.ஆருக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது என்றுதான் இந்த நேரத்தில் என்னால் சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே அடுத்த வாரம் ஐதராபாத் அல்லது டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் ஒய்எஸ் சர்மிளா தனது கட்சியை இணைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார் ஜெகன் தங்கை: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரசில் இணைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Jagan Thangai ,Sonia ,Rahul Gandhi ,YSR Telangana Party ,Congress ,New Delhi ,Andhra ,Chief Minister ,Jagan ,Sharmila ,Rahul ,Delhi ,
× RELATED ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை...