×

நிலவில் பிளாஸ்மாவை கண்டறிந்த சந்திரயான் தென் துருவத்தில் ஏற்பட்ட நில அதிர்வும் பதிவு: இஸ்ரோ தகவல்

சென்னை: நிலவின் தென் துருவத்தில் தீவிராமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் பிளாஸ்மா இருப்பதை உறுதி செய்துள்ளது, மேலும் நிலவில் ஏற்பட்ட நில அதிர்வும் பதிவாகி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயான் 3 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் தகவல்களை சேகரித்து, அதனை மேலும் ஆரய்ந்து நிலவில் உள்ள கனிமங்கள், அதன் தன்மை, நேரத்திற்கு ஏற்ப அதில் ஏற்படும் மாறுபாடுகள், நிலவில் வெப்பநிலை, பூமியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் வெப்பநிலை, நில அதிர்வுகள் என பல பிரத்யேக ஆய்வுகளை சந்திரயான் 3 திட்டம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் உள்ள இல்சா கருவி ரோவர் மற்றும் மற்ற கருவிகளால் ஏற்பட்ட நில அதிர்வை பதிவு செய்துள்ளது. லேண்டரில் உள்ள ரம்பா-எல்பி கருவி அதன் அருகில் உள்ள தரைப்பரப்பில் பிளாஸ்மா இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர்: லேண்டரில் உள்ள ரம்பா கருவி நிலவின் வளிமண்டலம் மற்றும் அயனி மண்டலத்தில் கதிரியக்க கூற்வியலை மேற்கொள்கிறது. இந்த கருவி நிலவின் தென் துருவத்தில் மேற்கொண்டு ஆய்வுகளில் முதல் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் முதல் கட்டமாக லேண்டர் அருகே உள்ள தரைப்பரப்பில் குறைவான அளவில் பிளாஸ்மா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த பிளாஸ்மாவில் அயனிகள் மற்றும் எலக்டரான்களின் அடர்த்தி அவை வெளிப்படுத்தும் ஆற்றல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவீடுகள் பிளாஸ்மாவில் இருந்து வெளியேறும் இடர்பாடுகளை குறைத்து ரேடியோ அலை தொடர்புக்கு உதவும். இது அடுத்து வரும் நிலவின் திட்ட வடிவமைப்புகளை மேம்படுத்த பங்களிக்கும். மேலும் இதே லேண்டரில் மைக்ரோ எலெக்ட்ரிக் மெக்கானிக்கல் அமைப்பு தொழில்நுட்பம் மூலம் நிலவில் நில அதிர்வுகள் ஆராயும் இல்சா கருவி ரோவர் மற்றும் மற்ற கருவிகளின் மூலம் ஏற்படும் அதிர்வுகளை பதிவுசெய்துள்ளது. கூடுதலாக கடந்த ஆக.26ம் தேதி இயற்கையாக ஏற்பட்ட நில அதிர்வு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிர்வு ஏற்பட என்ன காரணம் என்பதை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிலவின் தென்துருவத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ரோவரில் உள்ள மற்றொரு கருவியான ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெட்ரோஸ்கோப் வேறு தொழில்நுட்பம் மூலம் நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை மீன்டும் உறுதி செய்துள்ளது. மேலும் சில சிறிய கனிமங்கள் இருப்பதையும் உறுதி செய்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் நிலவில் எவ்வாறு சல்பர் வந்தது என்பதை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகளை கட்டாயப்படுத்துகிறது.

மேலும் சல்பர் நிலவில் இயற்ககையாக உள்ளதா அல்லது எரிமலை வெடிப்புகளால் வந்ததா, அல்லது எரிக்கற்கள் மோதி உருவானதா என்பதை ஆராய வேண்டும். நிலவில் உலா வரும் ரோவர் பாதுகாப்பான பாதையை தேடி சுற்றி சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா பதிவு செய்துள்ளது. இது ஒரு தாயின் கண்பார்வையில் குழந்தை விளையாடுவதை போல காட்சியளிக்கிறது என பதிவிட்டு இஸ்ரோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

The post நிலவில் பிளாஸ்மாவை கண்டறிந்த சந்திரயான் தென் துருவத்தில் ஏற்பட்ட நில அதிர்வும் பதிவு: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Moon ,South Pole ,ISRO ,Chennai ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...