×

பரனூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: சிஏஜி அறிக்கையின் அடிப்படையில், பரனூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உண்மை நிலையை அறிந்திட வேண்டும் என்று முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

தமிழ்நாட்டில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.28 கோடி கூடுதலாக பணம் பெறப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை கொடுத்துள்ளது. குறிப்பாக, திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே தமிழகத்தில் உள்ள 5 காலாவதியான சுங்கச்சாவடிகளான பரனூர், சூரப்பட்டு, நெமிலி, வானகரம், ஆத்தூர் சுங்கச்சாவடிகளை அகற்றிட வேண்டுமென்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கெல்லாம் செவிசாய்க்காத ஒன்றிய அரசு தற்போது வெளிவந்துள்ள சிஏஜி அறிக்கையின் உண்மை நிலையை உணர வேண்டும் என்றால், தென் மாநிலங்களில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியை அகற்றி பொதுமக்களுக்கு பரிசளிக்க கூடிய வகையில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களின் தலைமையின் கீழ் இயங்கி வரும் அரசு, சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் பரனூர் சுங்கச்சாவடியை அகற்றுவதிலும் முன்னோடியாக திகழ வேண்டும். பரனூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஓர் விசாரணை ஆணையம் அமைத்து உண்மை நிலையை அறிந்திட வேண்டும்.

The post பரனூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Paranur Tollgate ,Chennai ,CAG ,Tamil Nadu government ,Paranur ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...