×

சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் விடுதலையில் லஞ்ச ஒழிப்புதுறை, நீதிமன்ற செயல்பாடு துரதிஷ்டவசமானது: சென்னை ஐகோர்ட் பரபரப்பு கருத்து

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்து சிவகங்கை நீதிமன்றம் 2012ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், கடந்த 2001-2006ம் ஆண்டுகளில்வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக 2006ல் திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி 2012ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக அளித்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012 டிசம்பர் 3ம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

அந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் மறு ஆய்வு செய்யப்படும். எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி ஆகும்போது மேல்விசாரணை நடத்த அனுமதி கேட்டு அதன் பிறகு இறுதி அறிக்கை தாக்கல் செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க வகை செய்கிறது.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி குலோத்துங்க சோழன் விசாரணை நடத்தி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 374 சதவீதம் அதிகமாக வருவாய் ஈட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்கில் 272 சாட்சிகள், 235 ஆவணங்களை சேகரித்து 3 ஆண்டுகள் நடத்திய விசாரணையின் இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார். அதிகார வரம்பே இல்லாத சிவகங்கை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றியதன் மூலம் உயர் நீதிமன்றமும் தவறிழைத்திருக்கிறது. மேல்விசாரணைக்கு பிறகு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு பதிலாக, அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு, அரசு தலைமை வழக்கறிஞர், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணை நடைமுறையில் பிரச்னை உள்ளது.

இதுபோன்ற தவறுகள் நடைபெற அனுமதித்தால் புற்றுநோய் போல இந்த சமுதாயத்தை ஊழல் சிதைத்து விடும். லஞ்ச ஒழிப்பு துறை உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் அழிந்து விடும். இதை வேரோடு அழிக்க வேண்டும். கடந்த 2012ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதற்கு எந்த தடையும் இல்லை. என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் பதிலளிக்க வேண்டும். வழக்கு செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

முன்னதாக நீதிபதி இந்த வழக்கு குறித்து கூறும்போது, குற்றவாளியான ஓ.பன்னீர்செல்வமே தன்மீதான வழக்கில் மேல் விசாரணை கோரியுள்ளார். அதை நீதிமன்றமும் ஏற்று மேல் விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் மேல் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போதைய அட்வகேட் ஜெனரல், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆகியோரும் ஒப்புதல் அளித்தது துரதிஷ்டவசமானது. இதற்கிடையே இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது மேல் விசாரணை குறித்து சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணை நீதிமன்றத்திற்கே மாற்றி உத்தரவிட்டது. அந்த நீதிபதி குறித்து தெரிவிக்க விரும்பவில்லை. இப்படிப்பட்ட அமைப்பு ரீதியான தோல்வியைக் கண்டு உயர்நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ளும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், நாம் நமது அரசியலமைப்பு கடமையில் தவறியவர்களாகி விடுவோம். அந்த அறிக்கையை ஆய்வு செய்து வழக்கு தொடர்வதற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்று அப்போதைய சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். சபாநாயகர் நீதிபதியைப்போல் செயல்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றமே வழக்கிற்கு தரப்பட்ட அனுமதியை திரும்ப பெற முடியாது என்று தெரிவித்துள்ள நிலையில் இந்த சொத்து குவிப்பு வழக்கிற்கு வழங்கப்பட்ட அனுமதியை எப்படி திரும்ப பெற முடிந்தது என்றார். ஏற்கனவே திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்தது மற்றும் விடுவித்த தீர்ப்புகளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*கேலி கூத்தான விசாரணை
நீதிபதி தன் உத்தரவில், சபாநாயகர் இந்த வழக்கில் ஒரு நீதிபதி போல செயல்பட்டு ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வழக்கு தொடர அளித்த அனுமதியை திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. இந்த வழக்கின் மூலம் குற்ற விசாரணை நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சட்டங்கள் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு பொருந்தாது என்று இதன் மூலம் அறிவித்து விடலாம் என்றார்.

*பச்சோந்தியாக மாறியது
நீதிபதி உத்தரவில் கூறப்பட்டு ள்ளதாவது: இது குற்றவியல் நீதி வழங்கும் முறைக்கு அவமானம். லஞ்ச ஒழிப்பு துறை துரதிர்ஷ்டவசமாக ஒரு பச்சோந்தியாக மாறிவிட்டது. யார் அதிகாரத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து அதன் நிறங்களை எடுக்கத் தொடங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நீதிமன்றங்களும் இணைந்து செயல்பட்டன.

*நீதிமன்றம் கட்சிகளை பார்க்காது
ஏ கட்சி, பி கட்சி என்று நீதிமன்றம் பார்க்காது. அமைப்பு உடைக்கப்படாமல் இருப்பதை மட்டுமே நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு ஒரு தொடக்கப்புள்ளிதான்.

*நீதித்துறையில் வினோதமான வழக்கு
நீதிபதி தன் உத்தரவில், ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த கட்சி மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே மேல்விசாரணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இது நீதித்துறையில் ஒரு வினோதமான வழக்காக உள்ளது. அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி கே.இசக்கி ஆனந்தன் 2012 நவம்பரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குலோத்துங்கசோழன் தாக்கல் செய்த அறிக்கை கால் மிதியடிக்குள் சென்றுவிட்டது.

The post சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் விடுதலையில் லஞ்ச ஒழிப்புதுறை, நீதிமன்ற செயல்பாடு துரதிஷ்டவசமானது: சென்னை ஐகோர்ட் பரபரப்பு கருத்து appeared first on Dinakaran.

Tags : O. ,Bannerselvam ,Chennai Ikort ,Chennai ,Sivaganga Court ,Chief Minister ,
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஐயா...