×

அதிமுக ஆட்சியில் பிளீச்சிங் பவுடரில் கூட ஊழல் ஜிஎஸ்டி வரியே கிடையாத பொருளுக்கு ரூ.27 லட்சம் கொடுத்துள்ளார்கள்

* மழலையருக்கு வாங்கிய வாட்டர் பாட்டிலையும் விட்டு வைக்கவில்லை
* காரின் விலையே ரூ.4.39 லட்சம் தான், வாடகை ரூ.5.11 லட்சமாம்
* மாநகராட்சி கூட்டத்தில் கே.கே.நகர் தனசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் பிளீச்சிங் பவுடரில் கூட ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், பிளீச்சிங் பவுடருக்கு ஜிஎஸ்டி வரியே கிடையாத நிலையில் ஜிஎஸ்டி வரியாக ரூ.27 லட்சத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று மாநகராட்சி கூட்டத்தில் கணக்கு நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரன் குற்றச்சாட்டினார். சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், நேரமில்லா நேரத்தில், கணக்கு நிலைக்குழு தலைர் கே.கே.நகர் தனசேகரன் பேசியதாவது: கடந்த 2019-20ம் நிதியாண்டில் அதிமுக ஆட்சியில் தொடக்க கல்வி நிதி தணிக்கை ஆய்வில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் மண்டலம் 4,5,6,8,9 மற்றும் 10ல் இயங்கும் சென்னை மாநகராட்சி எல்கேஜி, யுகேஜி மழலையர்களுக்கு ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில்கள் 3 நிறுவனங்களிடம் இருந்து ரூ.37.11 லட்சத்திற்கு கொள்முதல் விதிமுறைகளை பின்பற்றாமல் வெறும் விலைப்புள்ளி அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்ளையடிப்பதற்காக மட்டுமே நோக்கமாக கொண்டு அரசாணையை பின்பற்றாமல் நடைபெற்ற இந்த கொள்முதலை முழுமையாக விசாரணைக்குட்படுத்தி, இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை துறையை ஆய்வு மேற்கொண்டதில் நிதியாண்டு 2019-20ல் சுமார் 2.2 கோடிக்கு பிளீச்சிங் பவுடர் 3 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.27,85,572 ஜிஎஸ்டி வரியாக மாநகராட்சி நிதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் சரக்கு மற்றும் வரி சேவை வரி சட்டத்தின் படி பிளீச்சிங் பவுடருக்கு ஜிஎஸ்டி வரி 0 சதவீதம் ஆகும்.

இப்படி இருக்கையில் ஒப்பந்ததாரர்கள் அளித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலைப் பட்டியலைக் கூட முழுமையாக ஆய்வுக்குட்படுத்தாமல் அதிகாரிகள் எப்படி ஆணை வழங்கினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையரை கேட்டுக் கொள்கிறேன். மேலும் 3 ஒப்பந்ததாரர்களைக் கருப்பு பட்டியலில் சேர்த்து அவர்களிடம் இருந்து முழு ஜிஎஸ்டி வரியை வட்டியுடன வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிளீச்சிங் பவுடர் ஒரு நிறுவனத்திடம் இருந்து ஒரு கிலோ ரூ.29.50க்கும் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து ஒரு கிலோ ரூ.30.90க்கும் வாங்கப்பட்டுள்ளது.

இதனால் கூடுதலாக ரூ.1.2லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இவைகள் அரசின் விதிகளுக்கு மாறாக கவர்மெண்ட் இ மார்க்கெட்டி சந்தையில் கொள்முதல் செய்யாமல் வெளிச்சந்தையில் ரூ.2.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இதனுடைய விவரம் ஏதும் இந்நாள் வரை தணிக்கைக்கு அளிக்கவில்லை. எனவே கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த டெண்டரை முழுமையாக விசாரணைக்குட்படுத்த வேண்டும். மேலும், செயற்பொறியாளருக்கு கார் வழங்கப்படாத நிலையில் 11 மாத வாடகையாக டாடா இண்டிகா காருக்கு ரூ.5.11 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காரின் விலையே 2019-20 நிதியாண்டில் ரூ.4.39 லட்சம் தான். மேலும் அந்த கார் பெரும்பாலான நாட்கள் ஓட்டிய அதிகபட்ச தூரம் வெறும் 40 கி.மீட்டர் தான். எனவே மாநகராட்சியின் நிதியை சிக்கனமின்றி செலவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று 2019-20ம் நிதியாண்டுகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் நிதி ரூ.7.41 கோடி அரசிடம் இருந்து பெறப்பட்டு இன்னும் திருப்பி செலுத்தாமல் 6 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர காப்பகங்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.4.8 ேகாடிக்கு கணக்கில்லை. மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ஈட்டிய வட்டி தொகை ரூ.38.2 கோடி அரசுக்கு இன்னும் திரும்பி செலுத்தவில்லை. பெரும்பாலான கவுன்சிலர்களுக்கு அலுவலகம் இல்லை. அவர்களுக்கு விரைவாக அலுவலகம் கட்டி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக ஆட்சியில் பிளீச்சிங் பவுடரில் கூட ஊழல் ஜிஎஸ்டி வரியே கிடையாத பொருளுக்கு ரூ.27 லட்சம் கொடுத்துள்ளார்கள் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Dinakaran ,
× RELATED ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மழை வெள்ளம் புகுந்தது