×

சம்பா பருவத்திற்கேற்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மானிய விலையில் வழங்கப்படும்: வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

திருவள்ளூர்: வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் பணி துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் நெல் நாற்றுவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், விரிவாக்க மையங்கள் மூலமாக பாரம்பரிய நெல் ரகங்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ். தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா மற்றும் செங்கல்பட்டு சிறுமணி நெல் விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் ஒரு கிலோ விதையின் முழு விலை ரூ.50ல் ரூ.25 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவாக பாரம்பரிய நெல் ரகங்கள் வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புள்ளவை. நீர் குறையும் போது தளர்ந்து போகாமல், தாங்கி நின்று நீர் கிடைத்ததும் சிறப்பான மகசூலைத் தரும். பாரம்பரிய நெல் ரகங்கள் பூச்சி மற்றும் நோய்களை எதிர்க்கும் சக்தியை இயல்பாகவே கொண்டுள்ளதால், இரசாயன மற்றும் பூச்சி மருந்துகளின் பயன்பாடு குறையும் என்பதால் விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.
மேலும், விதை கிராமத் திட்டத்தின் கீழ் அனைத்து வட்டாரங்களிலும் டிகேஎம் 13, எம்டியு 1010, சிஆர் 1009, ஏடிட்டி 54, பி ப்பி ட்டி 5204, ஏடிட்டி 37 ஆகிய நெல் இரகங்கள் 280 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, நெல் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி அல்லது அக்ரிஸ்நெட் வலை தளத்தில் முன்பதிவு செய்தும் தங்களுக்கு தேவையான விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அறிக்கையில் கூறியுள்ளார்.

The post சம்பா பருவத்திற்கேற்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மானிய விலையில் வழங்கப்படும்: வேளாண்மை இணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Samba ,Thiruvallur ,Agriculture L. ,Suresh ,Dinakaran ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே 500 ஏக்கர்...