
காஞ்சிபுரம்: கண் தான இரு வார விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் செவிலியர் மாணவிகள் பங்கேற்ற கண் தான விழிப்புணர்வு பேரணி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண் மருத்துவத்துறை, இந்திய மருத்துவ சங்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண்தானம் இருவார விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் சங்கரா செவிலியர் கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் கோபிநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய மருத்துவ சங்க காஞ்சிபுரம் கிளை தலைவர் மனோகரன், வடக்கு மண்டல மாநில துணை தலைவர் சரவணன், துணை தலைவர் ரவி, முத்துக்குமரன், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கர், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி தலைமை மருத்துவமனையில் துவங்கி ரயில்வே ரோடு வழியாக ராஜாஜி மார்க்கெட் வரை சென்று மீண்டும் தலைமை மருத்துவமனையை வந்தடைந்தது.
பேரணியில் சென்ற மாணவியர் கண் தானத்தை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியும், இருக்கும்போது இரத்த தானம், இறந்த பிறகு கண் தானம், கண் தானம் தருவீர், கண்ணொளி வழங்குவீர் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு சென்றனர். இதனைத் தொடர்ந்து செவிலியர் பயிற்சி மாணவியர் பங்கேற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினாப் போட்டி, நாடகப் போட்டி, மாறுவேடப் போட்டி போன்ற கண்தானத்தை வலியுறுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
The post கண் தான இரு வாரவிழாவையொட்டி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட சுகாதார இணை இயக்குநர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.