×

ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டம்?.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மசோதா தாக்கல்

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நாட்கள் முடங்கின. இதனால் பல முக்கிய விவாதங்களை நடத்த முடியாமல் போனது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. செப்.18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவை ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் வெவ்வேறு காலங்களில் நடைபெற்று வருகிறது. வெவ்வேறு காலங்களில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதால் செலவு அதிகரிப்பதாக பாஜக புகார் கூறி வந்தது. தேர்தல்களுக்கான செலவு அதிகரிப்பதுடன் அரசு இயந்திரங்களும் முடக்கப்படுவதாக பாஜக புகார் கூறி வந்தது. செலவை குறைக்கவும் அரசு இயந்திரங்கள் தேர்தல் பணியில் முடங்குவதை தடுக்கவும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என பாஜக கூறி வந்தது.

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றால் பல மாநில சட்டமன்றங்களின் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை ஏற்கனவே முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டம்?.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Parliament ,Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED கைவிரல்கள் இல்லாதவர்களுக்கு மாற்று...