×

கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் தாழ்வு; படகு போக்குவரத்து திடீர் ரத்து: சுற்றுலா பயணிகள் எரிச்சல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் எரிச்சலடைந்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சேவை நடத்தப்படுகின்றது. இன்று காலையிலும் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் பலர் திரண்டனர்.

இதையடுத்து படகு சவாரி செய்வதற்காக சுற்றுலா பயணிகள் காத்திருந்த நிலையில் கடல் நீர்மட்டம் திடீரென்று குறைந்தது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் படகுதுறையில் டிக்கெட் எடுக்க காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, காலை 8 மணிக்கு தொடங்க இருந்த படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 2 மணி நேரம் தாமதத்துக்கு பிறகு காலை 10 மணியளவில் மீண்டும் தொடங்கப்படும் என்றனர். இதனால் டிக்கெட் எடுப்பதற்காக கால்கடுக்க நீண்டவரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் எரிச்சலடைந்தனர்.

தினமும் 7 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள்
ஓணம் பண்டிகை விடுமுறை உள்ளிட்ட சில காரணங்களுக்காக கன்னியாகுமரி கடற்கரைக்கு கடந்த சில நாட்களாக அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில் ஓணம் பண்டிகைக்கு முந்தைய தினமான 28ம் தேதி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி கடற்கரையை சுற்றி பார்த்து உள்ளனர். திருவோணம் பண்டிகையான 29ம் தேதி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். பண்டிகை முடிந்த பிறகும் தினமும் சராசரியாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர்.

The post கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் தாழ்வு; படகு போக்குவரத்து திடீர் ரத்து: சுற்றுலா பயணிகள் எரிச்சல் appeared first on Dinakaran.

Tags : Kannyakumari ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...