×

மளிகைக் கடைக்காரர் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை: ராமேஸ்வரம் அருகே பரபரப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில், மளிகைக் கடைக்காரர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, தங்கச்சிமடத்தில் உள்ள முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் பைரம்கான் மகன் செய்யது யூசுப் (30). இவர், அங்குள்ள தர்ஹா பஸ் நிறுத்தத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர், இரண்டு ஆண்டுகளாக சவுதியில் வேலை பார்த்துள்ளார். கொரோனா காலத்திற்கு பிறகு, அங்கிருந்து சொந்த ஊரான தங்கச்சிமடம் வந்து மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 6 மணியளவில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன், செய்யது யூசுப் வீட்டிற்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 4 பேர், அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், அவரது வீட்டின் அருகே வசிப்பவர்கள், அப்பகுதி ஜமாத்தார்களிடமும் யூசுப் குறித்து விசாரணை செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் டிஎஸ்பி உமாதேவி தலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், செய்யது யூசுப்புக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டனர். மூன்று மணிநேர விசாரணைக்கு பின், அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதனால், தங்கச்சிமடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மளிகைக் கடைக்காரர் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை: ராமேஸ்வரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : GI ,Rameswaram ,
× RELATED ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு