×

கொல்லிமலையில் விடிய, விடிய கனமழை: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள ஆகாயகங்கை உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில வாரங்களாக கொல்லிமலையில் போதிய மழை இல்லாத காரணத்தால், இங்குள்ள அருவிகளில் சொற்ப அளவிலான தண்ணீர் கொட்டி வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை கனமழை பெய்தது. கொல்லிமலையில் மதியம் தொடங்கிய கனமழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.

இதனால் வனப்பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீர் ஆறுகள் வழியாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு அதிக அளவில் தண்ணீர் சென்று ஆர்ப்பரித்து செந்நிறத்தில் கொட்டுகிறது. மாசிலா அருவி, நம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாசிலா அருவியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தன பாறை அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

The post கொல்லிமலையில் விடிய, விடிய கனமழை: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Kolimalayas ,Sendamangalam ,Aagayaganga ,Namakkal ,Kolimayas ,Dinakaran ,
× RELATED தொடர் விடுமுறையை கொண்டாட ஏற்காடு, கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்