மதுக்கரை: கோவை அருகே கருங்கச்சை கருப்பராயன் கோவில் விழாவை முன்னிட்டு 137 ஆடுகள் வெட்டி 2 ஆயிரம் கிலோ கறி சமைத்து காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு மெகா அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை மதுக்கரை ஒன்றியம் மயிலேறிபாளையம் ஊராட்சியில் கிணத்துக்கடவில் இருந்து கல்லாபுரம் செல்லும் சாலையில் மாம்பள்ளி பிரிவில் கருங்கச்சை கருப்பராயன், கருங்காளி, கன்னிதேவி கோவில் உள்ளது. இக்கோவிலின் 20 ஆண்டு திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன. இதையடுத்து நேற்று அதிகாலை 137 ஆடுகள் வெட்டி 2 ஆயிரம் கிலோ கறி சமைக்கப்பட்டது. குழம்பு, வறுவல் தயார் செய்து வெள்ளை சாதத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த அன்னதானத்தில் மதுக்கரை, நாச்சிப்பாளையம், வழுக்குப்பாரை, ஒத்தக்கால் மண்டபம், மயிலேரிபாளையம், ஏலூர், மாம்பள்ளி, கிணத்துக்கடவு, கல்லாபுரம், வடபுதூர், சிங்கையன்புதூர்,சொக்கனுர், உள்ளிட்ட கிணத்துக்கடவு, மற்றும் மதுக்கரை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கருப்பராயனை வழிபட்டு கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று கிடா விருந்து சாப்பிட்டு சென்றனர். கிணத்துக்கடவு மற்றும் மதுக்கரை சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான கருப்பராயன் கோவில்கள் இருந்தும் இதுபோல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி அன்னதானம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post கோவை அருகே கோவில் விழாவில் 2 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியில் மெகா விருந்து: நீண்ட வரிசையில் நின்று சாப்பிட்ட பக்தர்கள் appeared first on Dinakaran.