×

குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள்

அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது’’ என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். காரணம், இந்தப் பிறவியை போல ஒரு அற்புதமான பிறவி வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தப் பிறவியை நல்ல முறையில் ஒருவன் வாழ்ந்தால், அவன் தெய்வ நிலைக்கு உயர முடியும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

மனிதன் தன்னுள் தெய்வத்தன்மையையும் மிருகத்தன்மையையும் கலந்து வைத்திருக்கின்றான். அறிவையும் உணர்ச்சியையும் கலந்து வைத்திருக்கின்றான். இவை இரண்டுமே ஒரு வாழ்க்கைக்குத் தேவையானது தான். ஆனால் அறிவும் உணர்ச்சியும் கலந்த கலவையின் அளவுகள் மிகவும் முக்கியம். மனிதர்கள் கிடைத்தற்கரிய இந்தப் பிறவியை அற்புதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் சான்றோர்களின் விருப்பம்.

அதற்காகவே படாத பாடுபட்டு வாழ்வின் பல உன்னதமான உண்மைகளை கண்டுபிடித்து நமக்கு சாஸ்திரங்களாகும் சடங்குகளாகவும் தந்திருக்கிறார்கள். அவைகளை நாம் ஏற்கலாம். மறுக்கலாம். ஆனால் அவைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொதிந்து இருக்கக்கூடிய எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய உண்மைகளை நாம் புறம் தள்ளிவிட முடியாது.

‘‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’’ என்கின்ற ஒரு பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ‘‘பசுமரத்து ஆணி போல்’’ என்ற சொல்லாடலையும் கேட்டிருக்கின்றோம். இவைகள் எல்லாம் இளம் மனதில் ஏற்க வேண்டிய நன்னெறிகளையும், ஒழுக்கமான வாழ்வியலையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன அதைத்தான் ஒரு குழந்தை வளர்ப்பில் பின்பற்ற வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் சொல்லுகின்றோம்.

குழந்தை என்பது தெய்வத்தின் அம்சம், குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்ற வார்த்தையாடலை நீங்கள் கேட்டிருக்கலாம், தெய்வத்தைக் கொண்டாடுவது போலவே குழந்தையையும் கொண்டாட வேண்டும். காரணம் குழந்தையிடம் பல தெய்வீகமான அம்சங்கள் இருக்கின்றன. கள்ளம் கபடம் அறியாதவைகளாக குழந்தைகள் இருக்கும். எந்தப் பிரதிபலனும் கருதாது அது விளையாடிக் கொண்டிருக்கும். வெற்றி தோல்விகளைப் பற்றி எந்தச் சிந்தனையும் இருக்காது.

ஒவ்வொரு விளையாட்டிலும் முழு ஈடுபாட்டோடு உற்சாகமாக இருக்கும். பொய் பேசாது. ஆனால் பிற்காலத்தில் நம்மைப் பார்த்து அது பல விதமான தவறுகளை செய்யக் கற்றுக் கொள்கின்றது. பெற்றோர்கள் 75 சதவீதமும், சமூக சூழல்கள் 25 சதவீதமும் குழந்தையின் நற்குணங்களையோ தீய குணங்களையும் தீர்மானித்து விடுகின்றன. சமூகத்தில் தன்னை சுற்றியுள்ள நன்மைகளையும், தீமைகளையும் பிரித்து உணர்ந்து தீமைகளை விலக்கி, நன்மைகளை ஏற்றுக்கொள்ளச் செய்கின்ற பயிற்சி பெற்றோர்களிடம் இருந்து கிடைக்க வேண்டும்.

அதற்கு பெற்றோர்களிடம் பெரிய அளவு கல்வி அறிவு இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. நல்ல குணங்கள் இருந்தால் போதும். அந்தக் குணங்களை அவர்கள் எளிதாக குழந்தைகள் இடம் சேர்த்து விட முடியும். குழந்தைகள் மனநிலையை பெற்றோர் களைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நோக்கத்திற்காக இந்த உலகத்திலே படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தம்முடைய விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்று வதற்காகவே குழந்தைகளை பெற்றிருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளை, நாம் நமக்கு உள்ள உரிமைப் பொருளாக மட்டுமே கருதி, நம்முடைய விருப்பங்களையும் திணிக்கக்கூடாது.

இந்த உளவியல் உண்மைகளை நம்முடைய ஆழ்வார்கள், நாயன்மார்கள் 1500 வருடங்களுக்கு முன்னாலேயே பல பாடல்களில் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். ஒரு குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை, பெரியாழ்வார் ஒரு பாசுரத்திலே காட்டுவதைப் பார்க்கலாம். கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு தாயாரோடு கோபம். யசோதை கண்ணனை கூப்பிட்டு கூப்பிட்டுப் பார்க்கிறாள்.

‘‘கண்ணா வா, வந்து நீராடு. உன்னுடைய உடம்பெல்லாம் எத்தனை அழுக்காக இருக்கிறது? இப்படி இருந்தால் என்ன ஆகும்? உடம்புக்கு ஏதாவது நோய் நொடி வந்து விடாதா? வந்தால் நீ தானே துன்பப்படப் போகிறாய். உனக்காக மஞ்சளும் மற்ற வாசனைப் பொருட்களும் கலந்த நன்னீரை தயாராக வைத்திருக்கிறேன். இளம் சூட்டில் இருக்கிறது. நீ வந்து குளி. இதோ சாம்பிராணியும் தயாராக வைத்திருக்கிறேன்.

உனக்காக பல நல்ல தின்பண்டங்கள் தயார் செய்து வைத்திருக்கிறேன். அப்பம், பால், வெண்ணெய் இன்னும் எத்தனையோ பணியாரங்கள் தயாராக செய்து வைத்திருக்கிறேன். வா. வந்து நீராடு’’ என்று எத்தனையோ முறை சொல்லி அழைக்கின்றாள். ஆனால், கண்ணன் தன்னுடைய தாயாரின் வார்த்தைகளை குறித்துக் கவலைப்படாமல் விளையாடிக் கொண்டிருக்கிறான். கண்ணன் ஏன் இவ்வாறு முரட்டுத்தனம் செய்கின்றான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. எப்படியோ சமாதானப்படுத்தி அழைத்து வந்து குளிப்பாட்டுகிறாள்.

‘கண்ணா, உனக்கு என் மீது இத்தனை கோபம்?’’ என்று கேட்கிறாள். அப்பொழுது கண்ணன் சொல்கின்றான்.

‘‘அம்மா நேத்து நீ என்னைப் பற்றி மூன்றாவது வீட்டு அத்தையிடம் என்ன சொன்னாய்?’’
யசோதைக்கு ஒன்றும் புரியவில்லை.
‘‘நான் எதுவும் சொல்லவில்லையே.’’

கண்ணன் தன்னுடைய விழிகளை பெரிதாக உருட்டி பார்க்கிறான்.

‘‘பொய் பேசாதே அம்மா. நான் சொல்லவா’’ என்றான். கண்ணன் நீட்டி முழக்கி விவரித்தான்.

‘‘மூன்றாவது வீட்டு அத்தை நேற்று காலை வீட்டுக்கு வந்திருந்தாளா… அவளிடத்தில் என்னைப் பற்றி பலவிதமாகச் சொன்னாயா…. நான் வீட்டுக்கு வீடு போய் வெண்ணெய் திருடுகிறேன்… பிள்ளைகளை அடித்து விடுகிறேன்… பெண் பிள்ளைகளுடைய ஜடைகளைப் பிடித்து இழுக்கிறேன்… பொருள்களை வாரி இறைக்கிறேன்… யாருக்கும் அடங்குவதில்லை… என்றெல்லாம் பெரிய பட்டியலை வாசித்தாயா…’’ யசோதைக்கு மெல்ல புரிந்தது.

‘‘அம்மா நான் உன்னுடைய பிள்ளை. என்னை நீ தனியாக அல்லவா கண்டிக்க வேண்டும். அந்த அத்தையிடம் என்னைப் பற்றி இவ்வளவு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அவள் என்னைப் பார்த்து ஒரு மாதிரியாக சிரித்துக்கொண்டே சென்றதை நீ கவனிக்கவில்லையா? நீ என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடி. என்ன வேண்டுமானாலும் சொல். ஆனால் மற்றவர்கள் முன்னே என்னைப் பற்றி இப்படி எல்லாம் சொல்லாதே’’

யசோதைக்கு கண் கலங்கியது. தான் செய்த தவறு புரிந்தது.” தனிமையில் தன்னுடைய குழந்தையிடம் மென்மையாகச் சொல்ல வேண்டிய விஷயத்தை மற்றவர்களிடம் புகாராக சொல்லி விட்டோமே, அது இந்த குழந்தையின் மனதை பாதித்து இருக்கிறதே” என்று நினைத்து வருந்தினாள்.

‘‘கண்ணா இந்த அம்மாவை மன்னித்து விடுடா. நான் தெரியாமல் சொல்லிவிட்டேன். இனி மறந்தும் கூட மற்றவர்களிடம் உன்னைப் பற்றி நான் சொல்ல மாட்டேன்’’ என்று சொல்ல, கண்ணன் அம்மாவின் கழுத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ‘‘அம்மா என்றால் அம்மா தான்’’ என்றான்.

இது நம் வீட்டில் நடக்கக்கூடிய காட்சிதான். பல பேர் தங்கள் குழந்தைகளைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசுவதையும், மற்றவர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் பொழுது, ‘‘அந்த குரங்கு எங்கே?’’ ‘‘அந்த கழுதை எங்கே?’’ ‘‘உருப்படாதவன் எங்கே இருக்கிறான்?’’ என்றெல்லாம் திட்டுவதைப் பார்த்திருக்கிறோம். இது கூடாது. இது மிக ஆழமாக குழந்தையினுடைய மனதை பாதிக்கும். இதைத்தான் பெரியாழ்வார் சொன்னார். அந்தப் பாசுரம் இது.

கறந்த நற்பாலும் தயிரும், கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே!
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் “பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்” மஞ்சனம் ஆட நீ வாராய்

இது ஏதோ கோவிலில் பாடுகின்ற பாசுரம் என்று விட்டு விட்டோம். இதில் இருக்கக்கூடிய அறிவியல் கருத்துக்களை நாம் எடுத்துக் கொள்ள மறந்து விட்டோம். குழந்தைகளின் மனநிலை அறிந்து நாம் செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கும் பெரியவர்களைப் போலவே மனம் இருக்கிறது. வற்புறுத்தலும் திணிப்பும் குழந்தையின் மனநிலையை மாற்றி விடுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக பிடிவாதக்காரனாக அந்த குழந்தையை உருமாற்றம் செய்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது.

தொகுப்பு: தேஜஸ்வி

The post குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இந்த வார விசேஷங்கள்