×

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு பாதுகாப்பு பணிக்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ள ரபேல் போர் விமானம்

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்புக்காக தயார் நிலையில் ரபேல் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாடு வரும் 9, 10ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், அதை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் டெல்லி வான்பரப்பில் பாராகிலைடர்கள், பாரா மோட்டார்கள், தொங்கும் கிலைடர்கள், யுஏவி.க்கள், யுஏஎஸ் மிக குறைந்த எடை கொண்ட விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள், ராட்சத பலூன்கள், சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் குவாட்காப்டர்கள் பறக்க தடை விதித்து டெல்லி கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு வரும் 12ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர்மட்ட கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, டெல்லி வான்வெளி பகுதியின் முக்கிய இடங்களில், புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டங்களை நிறுத்துவதுடன், வான்வழியேயான எச்சரிக்கை அமைப்புகளையும் நிறுத்தி பாதுகாப்பை மேற்கொள்கின்றனர். இவற்றுடன் இந்திய விமான படையின் ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. எந்த வகையான வான் தாக்குதலுக்கும் தயார் நிலையில் இருக்கும்படி விமான படைக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. நேத்ரா என்ற கண்காணிப்பு விமானம் நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியை மேற்கொள்ள உள்ளது.

 

The post டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு பாதுகாப்பு பணிக்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ள ரபேல் போர் விமானம் appeared first on Dinakaran.

Tags : Rafael ,G20 Summit ,Delhi ,New Delhi ,Dinakaran ,
× RELATED பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி