×
Saravana Stores

திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலை மோதல்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய கிரிவலம் வந்தனர். கோயிலில் இன்றும் கூட்டம் அலைமோதுவதால் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு, இறைவன் மலை (கிரி) வடிவில் எழுந்தருளி காட்சியளிப்பதால், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

அதன்படி திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 10.38 மணிக்கு தொடங்கி, இன்று காலை 8.13 மணிக்கு நிறைவடைவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை கோயில், இடுக்குப்பிள்ளையார் கோயில் ஆகியவற்றில் வழிபட்டபடி பக்தர்கள் விடியவிடிய கிரிவலம் சென்றனர்.

அண்ணாமலையார் கோயிலிலும் கூட்டம் அலைமோதியது. இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் பொதுதரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பவுர்ணமி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதையொட்டி, திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட்டன. இந்த பஸ் நிலையங்களில் இன்று காலை கூட்டம் அலைமோதியது. பஸ்களில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறினர். அதேபோல் வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

 

The post திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலை மோதல்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Krivalam ,Avani ,Girivalam Annamalaiyar ,
× RELATED 2வது நாளாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்...