×

தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கருத்துகளைப் பரப்பும் நாளிதழை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

சென்னை: காலை உணவு திட்டம் தொடர்பாக விமர்சித்த நாளிதழுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் தினையளவு உதவி செய்திருந்தாலும், அந்த உதவியின் பயன் அறிந்தவர்கள், அந்த உதவியைப் பனையளவுக்கு உயர்த்திப் பார்ப்பார்கள். ஆனால் நாளிதலிடம் இந்த உயரிய பண்பாடோ கோட்பாடோ இல்லை என்பதை அம்பலப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அது இன்று வெளியிட்டுள்ள அநாகரீக செய்தி அம்பலப்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ மாணவிகளுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்த நாளிதழின் கீழ்த்தரமான செய்தி கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் கல்விப் புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு கடும் களப்பணியாற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியை எதிர்த்து வன்மத்தோடு எழுதி இருக்கிறது அந்த நாளிதழ். தமிழகத்தின் மற்றைய ஏடுகள் அனைத்தும் இத்திட்டத்தைப் பாராட்டி எழுதிக் குவித்துள்ளன.

காலை உணவை உண்டு உடல் திறனுடன் கல்வியை கற்கும் மாணவர்களின் புன்னகைபூக்கும் முகங்கள் அந்த குறிப்பிட்ட நாளிதழுக்கு மட்டும் வெறுப்பாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கருத்துகளைப் பரப்பும் நாளிதழை தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அந்த நாளிதழுக்கு கடும் கண்டனத்தையும் பதிவுசெய்கிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கருத்துகளைப் பரப்பும் நாளிதழை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Jawahirullah ,Chennai ,Humanitarian People's Party ,Jawahirlah ,
× RELATED நீட் தேர்வு என்ற கல்வி மோசடியை இனியும்...