×

மெரினா கடற்கரையில் பரபரப்பு மணலில் புதைந்திருந்த பழமையான கற்சிலை மீட்பு: ஒரே வாரத்தில் 5 சிலைகள் சிக்கியதால் கடத்தல் சிலைகளா என போலீசார் வீசாரணை

சென்னை: மெரினா கடற்கரையில் பரபரப்பு மணலில் புதைந்திருந்த மிகவும் பழமையான கற்சிலை ஒன்றை போலீசார் மீட்டு மயிலாப்பூர் தாசில்தாரரிடம் ஒப்படைத்தனர். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 5 கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு கடத்த சதி திட்டமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ெமரினா கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள மணற்பரப்பில் நேற்று மாலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். சிறுவர்கள் சிலர் மணற்பரப்பில் உட்கார்ந்து மணலை தோண்டி விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது கற்சிலை ஒன்று வெளியில் தெரிந்துள்ளது. இதையடுத்து சிறுவர்கள் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். அதைப் பார்த்த படைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் சாமி சிலை என்று தொட்டு வணங்கினர். சிலர் கற்பூறம் வாங்கி வந்து தீபம் ஏற்றி வணங்கினர். பின்னர் போலீசார் மணல் பரப்பில் புதைந்து இருந்த கற்சிலையை மீட்டனர்.

அந்த சிலை மிகவும் பழமையான சிலையாக இருந்ததால் என்ன சிலை என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கற்சிலையை மீட்டு மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், கடந்த 21ம் தேதி இரவு கலங்கரை விளக்கம் அருகே உள்ள மணல் பரப்பில் மிகவும் தொண்மையான 4 கற்சிலைகள் மீட்கப்பட்டன. அந்த சிலைகளும் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மெரினா பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 5 கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால் போலீசாருக்கு இது கடத்தல் சிலைகளாக இருக்கலாம் என்றும், வெளிநாடுகளுக்கு கடத்தும் நோக்கில் இந்த சிலைகள் மணல் பரப்பில் கடத்தல் காரர்கள் புதைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மெரினா கடற்கரையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மெரினா கடற்கரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post மெரினா கடற்கரையில் பரபரப்பு மணலில் புதைந்திருந்த பழமையான கற்சிலை மீட்பு: ஒரே வாரத்தில் 5 சிலைகள் சிக்கியதால் கடத்தல் சிலைகளா என போலீசார் வீசாரணை appeared first on Dinakaran.

Tags : Marina Beach ,Chennai ,Mylapur Tahsildar ,
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...