×

கப்பலில் இருந்து இறங்க முடியாமல் ஒன்றிய அமைச்சர்கள் தத்தளிப்பு: குமரியில் பரபரப்பு

நாகர்கோவில்: இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர் குறைகளை தீர்க்க சாகர் பரிக்கிரமா என்ற யாத்திரையை ஒன்றிய அரசு தொடங்கி உள்ளது. மீனவர்களின் பிரச்னைகள், அனுபவங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ளவும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், கடலோரப் பகுதிகளின் மீனவர்களுக்கான திட்டங்களை பிரபலப்படுத்தவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் இருந்து துவங்கிய யாத்திரை இன்று குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் வந்தடைந்தது. இந்த குழுவில் ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா, முருகன் ஆகியோர் இன்று காலை 8.30 மணிக்கு தேங்கா பட்டணம் வருவதாக அறிவிப்பு வெளியானது. அதற்காக நேற்று திருவனந்தபுரத்தில் வந்து அங்கு தங்கி இருந்தனர். இன்று காலையில் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தின் இருந்து கடற்படைக்கு சொந்தமான சிறு கப்பலில் அவர்கள் தேங்காப்பட்டணம் துறைமுகம் புறப்பட்டு வந்தனர்.

அவர்களை வரவேற்று தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் அழைத்துக்கொண்டு வர தனியார் விசைப்படகுகள் சென்றன. துறைமுகம் அருகே வந்த போது அங்கு காற்று பலமாக வீசிக்கொண்டு இருந்தது. மேலும் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து அலை அடித்துத்கொண்டிருந்ததால் கடற்படைக்கு சொந்தமான சிறு கப்பலில் இருந்து, துறைமுகத்தின் உள்ளே வரும் தனியார் படகில் அமைச்சர்கள் ஏற முடியாமல் தவித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கடலில் கடற்படையின் கப்பலில் அமைச்சர்கள் தவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நிகழ்ச்சி தொடங்குவதும் தாமதமானது. ஒன்றிய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இன்று தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தொடங்கி தூத்தூர், வள்ளவிளை, குறும்பனை, வாணியக்குடி, குளச்சல், முட்டம் மீனவ கிராமங்களில் சென்று அந்தந்த பகுதி மீனவ மக்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற விழாவில் மீனவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்கி பேசுகின்றனர்.

 

The post கப்பலில் இருந்து இறங்க முடியாமல் ஒன்றிய அமைச்சர்கள் தத்தளிப்பு: குமரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Union ,Kumari ,Nagercoil ,Sagar Parikrama ,India ,
× RELATED இளம்பெண் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி