×

ஒரேநாளில் 8 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.30.90 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி

சென்னை: ஒரேநாளில் 8 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.30.90 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று தூத்துக்குடி, நாகப்பட்டினம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 8 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.30.90 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 22 ஏக்கர் 48 சென்ட் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பிரிவு- 78ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில், வருவாய் மற்றும் காவல்துறையினர் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 2 கோடியாகும்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், சிறுபுலியூர் அருள்மிகு கிருபா சமுத்திர பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 24 ஏக்கர் நன்செய் நிலமும் மற்றும் திருப்பள்ளிமுக்கூடல் கிராமம் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அபிசேகக் கட்டளைக்குச் சொந்தமான 19 ஏக்கர் 54 சென்ட் நன்செய் நிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. நாகப்பட்டினம் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பிரிவு- 78ன் படி இன்று நாகப்பட்டினம் இணை ஆணையர் திரு.வி.குமரேசன் மற்றும் திருவாரூர் உதவி ஆணையர் (கூ.பொ.) திருமதி ப.ராணி ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் காவல் துறையினர் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.3.90 கோடியாகும்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், குலவிளக்கு அருள்மிகு கோபாலபெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கர் 67 சென்ட் நிலங்கள் மற்றும் அருள்மிகு பொன்மலை குமாரசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 22 ஏக்கர் 91 சென்ட் நிலங்கள் 31 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனை அகற்ற ஈரோடு மண்டல இணை ஆணையர் நீதிமன்ற உத்தவின்படி சட்டப்பிரிவு- 78ன் கீழ் உதவி ஆணையர் அன்னக்கொடி முன்னிலையில் வருவாய் மற்றும் காவல் துறையினர் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.15 கோடியாகும்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், அய்யம்பாளையம், அருள்மிகு ஏரிகருப்பண்ணசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 23 வீடுகள் உள்ள 6 ஏக்கர் புன்செய் நிலம், உத்தமபாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஒரு வீட்டுடன் கூடிய 30 சென்ட் நிலம், லக்கமநாயக்கன்பட்டி, அருள்மிகு அழகேஸ்வரசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 14 ஏக்கர் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மண்டல இணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி உதவி ஆணையர் கருணாநிதி முன்னிலையில் வருவாய் மற்றும் காவல் துறையினர் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.10 கோடியாகும். ஆகமொத்தம் ஒரேநாளில் மீட்கப்பட்ட 8 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.30.90 கோடியாகும்.

The post ஒரேநாளில் 8 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.30.90 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Foundation Action ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,G.K. ,Stalin ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...