
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமை வகித்தார், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா சந்திரயான் 3 திட்டம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டம், ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தியது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பாராட்டி நன்றி தெரிவித்தார். அப்போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் எழுந்து ஒன்றிய அரசு காஸ் சிலிண்டர் எரிவாயு குறைத்துள்ளது. அதற்கும் நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என முறையிட்டார். இதற்கு திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எழுந்து நின்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் மாநகராட்சி குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், கவுன்சிலர் சிவராஜசேகரன் உள்ளிட்டோர் பாஜ கவுன்சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர் இதனால் மாமன்ற கூட்டத்தில் கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு நனறி தெரிவிக்கும் படி மேயருடன் முறையிட்டுக்கொண்டே இருந்த நிலையில் அவர் திடீரென வெளிநடப்பு செய்தார்.
அதனை தொடர்ந்து கூட்டம் மீண்டும் தொடங்கியது. கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, மண்டலம் 10, வார்டு 130ல் உள்ள குமரன் நகர் பிரதாச சாலைக்கு மாண்டொலின் சினிவாசன் பிரதான சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மண்டலர் 9, வார்டு 118,119ல் அமைந்துள்ள மியூசிக் அகடமி அருகே உள்ள கத்தீட்ரல் சாலை அருகே உள்ள மேம்பாலத்திற்கு பிரபல இசை கலைஞர் டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா மேம்பாலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடங்களில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். தனியார் மற்றும் அரசு கூட்டு முயற்சியில் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பதற்கும், மின்சாரம் தயாரிப்பதற்கும் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்பன 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை தொடர்ந்து நடந்த கேள்வி நேரத்தின் போது, வார்டு 24 அதிமுக கவுன்சிலர் பேசுகையில் எனது வார்டு பகுதியில் ஒரு காஸ் நிறுவனம் பைப்லைன் பதித்து வருகிறது. ஜிஎன்டி சாலை அருகே பதிக்கப்பட்டு வரும் பைப்லைன் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பதிக்கப்பட்டு வருகிறது, காஸ் லைனில் ஏதாவது பிரச்சணை என்றால் பகுதியே எரிந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அது குறித்து என்னிடம் மக்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால் திட்டம் குறித்து அதிகார்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் வார்டு மக்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும். இது மட்டுமல்ல எந்த பணிகள் குறித்தும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை, தொடர்ந்து வார்டு 35 மதிமுக கவுன்சிலர் ஜீவன் வார்டில் நடைபெறும் எந்த பணியாக இருந்தாலும் அதை பற்றி தெரிந்தால் தான் மக்களுக்கு பதில் சொல்ல முடியும், அதிகாரிகள் இதை பற்றி சொல்லாமல் இருப்பதை குற்றச்சாட்டாக முன்வைக்கறேன் என்று கூறினார்.
மேயர் பிரியா: இந்த பணி தான் நடக்க போகிறது என தெரிவிக்க முடியாது. ஒரு வார்டில் ஒப்பந்த பணிகள் முடித்து பணிகள் தொடங்கும் போது வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை. இது பற்றி ஏற்கனவே மண்டல அலுவலர்களுக்கு என்ன பணி மேற்கொள்ளப்படுகிறது என கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க கூறியிருக்கிறோம், என்னென்றால் அதில் இருக்கும் நிறை குறைகளை மக்கள் அதிகாரிகளிடம் கேட்பத்தில்லை கவுன்சிலரிடம் தான் கேட்பார்கள், அதனால் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கூறியுள்ளோம். அதிமுக கவுன்சிலர்: தற்போது பதிக்கப்பட்டு வரும் காஸ் பைப்லைன் பதிப்பதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளதா அல்லது தனியார் நிறுவனம் சட்ட விரோதமாக பதிக்கிறதா என்பதை தெரியப்படுத்த வேண்டும். அனுமதி வழங்கப்பட்டிருந்தால் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்.
ஆணையர் ராதாகிருஷ்ணன்: இந்த வார்டில் நடைபெறும் காஸ் பைப்லைன் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடுகிறேன், வார்டுகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடப்பது குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்வதில் எந்த தவறும் கிடையாது. அந்தந்த வார்டுகளில் நடக்கும் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கவுன்சிலர், அதிகாரிகள், அலுவலர்களிடையே ஜனரஞ்சகமான போக்கு இருக்க வேண்டும். துணைமேயர் மகேஷ்குமார்: வார்டுகளில் சாலை பணிகள் நடைபெறும் போது அந்தந்த கவுன்சிலர்களுக்கு தெரிவித்து விட்டு போட வேண்டும் அப்போது தான் அந்த பணிகளை கவுன்சிலர்கள் கண்காணிக்க முடியும் இதை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன். மதிமுக கவுன்சிலர் ஜீவன்: கவுன்சிலர்களுக்கு கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் பணிகள் குறித்து கேட்டால் எல்லை மீறி பேசுகிறார்கள, நள்ளிரவில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தால் மிரட்டுவது போல பேசுகின்றனர். மேயர் பிரியா: ஒப்பந்த தாரர்கள் பணிகளை சரியாக செய்யவில்லை என்றால், அதை புகைப்படம் எடுத்த லெட்டராக வைத்து எங்களிடம் தந்தால், கண்டிப்பாக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மேயர், கமிஷனர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.