சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் அமர்வில் நாளை முறையிடப்படும் என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பார்த்த நீதிபதி, ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என்றார். இதையடுத்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை பரிசீலித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த மனுவை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க முடியாது. எம்பி, எம்எல்களுக்கான சிறப்பு நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவசர அவசரமாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணிகுமார் ஆகியோர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி, அமலாக்கத் துறையின் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை இன்று நாடியது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதி எம். சுந்தர், “வழக்கு தொடர்பாக விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் ஏற்கனவே விலகி இருந்தார்.நீதிபதி ஏற்கனவே வழக்கில் இருந்து விலகி இருப்பதால் இந்த முறையீட்டை எப்படி ஏற்பது?,” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், இதற்கு மாற்றாக உள்ள அமர்வு இன்றைக்கு விடுமுறை என்பதால் தான் தங்களிடம் முறையிட்டதாகவும் மேலும் நிர்வாக ரீதியிலான உத்தரவை பிறப்பித்தால் கூட போதும் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதி, செந்தில் பாலாஜி வழக்கை யார் விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார். ஆகவே தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள்,”என்று அறிவுறுத்தினார். ஆனால் தலைமை நீதிபதி தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இருப்பதால், செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் அமர்வில் நாளை முறையிடப்படும் என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதியிடமே முறையிடுங்கள் : உயர்நீதிமன்றம்!! appeared first on Dinakaran.