×

அன்னதானம் பசியைப் போக்கும்… கல்வி தானம் அறியாமையை அகற்றும்… உடலுறுப்பு தானம் மரணத்திற்குப் பிறகு வாழவைக்கும்: ஆந்திர அமைச்சர் ரோஜா பேச்சு

அமராவதி: உடல் உறுப்புகளை தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் சார்பில் சர்வதேச உடலுறுப்புகள் தானம் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில சுற்றுலா அமைச்சர் ரோஜா செல்வமணி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; உடலுறுப்பு தானம் குறித்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறேன்.

எந்த கடவுளோ, மதமோ உடலுறுப்பு தானம் செய்யக்கூடாது என கூறவில்லை. உடலுறுப்பு தானம் செய்வதின் மூலம் மரணத்துக்கு பிறகும் உயிர் வாழ முடியும். தானத்தில் சிறந்தது என்று முன்பு அன்னதானத்தைக் கூறியதாகவும், இன்று தானத்தில் சிறந்தது உடலுறுப்பு தானமாகும். மேலும் அன்னதானம் பசியைப் போக்கும் என்றும், கல்வி தானம் அறியாமையை அகற்றும் என்றும், உடலுறுப்பு தானம் தான் உயிரைக் கொடுக்கும்.

உடலுறுப்பு தானம் மூலம் மற்றவர்களுக்கு உயிர்கொடுப்பதால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் உறுப்பு தானம் செய்தவர்களைக் கடவுளாக வணங்குவர். அந்த குடும்பங்கள் உடலுறுப்பு தானம் செய்தவரைப் பிரம்மாவுக்கு நிகராக போற்றுவார்கள். எனவே, ஒருவர் மரணித்தபிறகு அவரது உடலை மண்ணில் புதைக்காமல், உடலுறுப்பு தானம் மூலம் மனிதர்களின் மேல் விதைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

 

The post அன்னதானம் பசியைப் போக்கும்… கல்வி தானம் அறியாமையை அகற்றும்… உடலுறுப்பு தானம் மரணத்திற்குப் பிறகு வாழவைக்கும்: ஆந்திர அமைச்சர் ரோஜா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Andhra Minister Roja ,Amaravati ,Andhra Tourism Minister ,Roja ,Sripuram… ,
× RELATED தனி நபரை தவறாக விமர்சித்தால்...