×

1000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக. 31: ‘1000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை’ திட்டத்தை நெதர்லாந்து நாட்டு நிறுவனம் மேற்கொள்வதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார். நெதர்லாந்து நாட்டின் சார்பாக சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள ‘1000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை’ திட்டத்தை சென்னை லிட்டில் பிளவர் கான்வென்டில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் குடிநீர்த் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 1000 மில்லியன் லிட்டருக்கும் மேலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும், பிற மாவட்டங்களில் தனிக் குடிநீர் திட்டம் நீங்கலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 544 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 2,104 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், 12 மாநகராட்சிகள், 67 நகராட்சிகள், 344 பேரூராட்சிகள் மற்றும் 52,321 ஊரக குடியிருப்புகளில் உள்ள 4.53 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு 5 கோடிய 36 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 3,122 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

நெம்மேலியில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். மேலும், பேரூரில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்பணிகள் அனைத்தும் முடிக்கப் பெற்ற பின்னர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து நாளொன்றுக்கு 750 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும். நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் நீர் வழங்கலின் சமநிலை ஏற்படுத்திட முடியும்.

இத்திட்டம் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதால் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சிக்கு அருகிலுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளை இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்துவதால் எதிர்காலங்களில் சென்னைக்கு தேவைப்படும் குடிநீர் முழுமையாக வழங்கிட முடியும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ் ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், நெதர்லாந்து துணை தூதர்கள் ஹெங்க ஓவிங்க், எவூட் டி விட், ஜெர்மன் நாட்டின் துணை தூதர் மைக்கேல் குச்லர், இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஏவா பென்னஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

n சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் குடிநீர்த் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார்.
n சென்னை மாநகராட்சிக்கு அருகிலுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளை இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்துவதால் எதிர்காலங்களில் சென்னைக்கு தேவைப்படும் குடிநீர் முழுமையாக வழங்கிட முடியும்.

The post 1000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,KN Nehru ,Chennai ,Rare Chennai ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...