×

சொத்து வரி பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

சென்னை, ஆக.31: காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டரை கையும் களவுமாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் சுந்தர் (60). இவர், அதே பகுதியில் தனது பெயரில் உள்ள 460 சதுர அடி நிலத்தை தனது மகன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி மகன் பெயரில் மாற்றம் செய்வதற்காக, மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

நீண்ட நாட்களாக பெயர் மாற்றம் செய்யாமல் அலைக்கழித்ததால் மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றும் ரேணுகாதேவியிடம் கேட்டபோது, ₹15 ஆயிரம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். ஆவணங்கள் சரியாக உள்ள நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முதற்கட்டமாக ₹10 ஆயிரம் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி ₹5 ஆயிரம் தருவதாக கூறுமாறு தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுந்தரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட ரேணுகாதேவியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, மநாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற சுந்தர், பில் கலெக்டர் ரேணுகாதேவிக்கு போன் செய்தபோது, ஆலடிதோப்பு பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் அங்கு வருமாறு தெரிவித்துள்ளார். இதனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு அங்கு சென்ற சுந்தர், ரசாயனம் தடவிய ₹10 ஆயிரம் நோட்டுகளை ரேணுகாதேவியிடம் கொடுத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கீதா தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பில் கலெக்டர் ரேணுகாதேவியை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது, சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரேணுகாதேவியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சொத்து வரி பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Anti-Corruption Bureau ,Chennai ,Kanchipuram Corporation ,
× RELATED அண்ணா நினைவு பூங்காவில் பாம்புகள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்