×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் சரிபார்ப்பு பணியினை கலெக்டர்கள் ஆய்வு

காஞ்சிபுரம், ஆக.31: காஞ்சிபுரம், திருப்புக்குழி ஊராட்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டில் கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத்தெகை விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புக்குழி ஊராட்சியில் பெறப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பணியாளர்கள், வீடுவீடாக சென்று சரிபார்க்கும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து, பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறையினை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். மேலும், இப்பள்ளியில் ₹93.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிட பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திம்மராஜாகுளம், ஜிஎஸ்டி சாலை, மேலமையூர் ஊராட்சி என்ஜிஜிஓ காலனி, பெரிய நத்தம் மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பயன் பெறும் பயனாளிகளின் இல்லங்களுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். அப்போது, செங்கல்பட்டு வட்டாட்சியர் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.

திருக்கழுக்குன்றம்: தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதியுடைய நபர்கள் குறித்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட வெங்கப்பாக்கம், முள்ளிகொளத்தூர், ஈகை ஆகிய கிராமங்களில் நேற்று வீடு வீடாக சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண அட்டை ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு, சொந்த நிலம் இருக்கிறதா, என்ன வேலை செய்கிறார்கள், குடும்பத்தில் உள்ள நபர்கள் எத்தனை பேர், அவர்கள் எந்தெந்த பணியில் உள்ளனர். அரசு பணியில் உள்ளனரா, சொந்தமாக கார் உள்ளிட்ட ஏதேனும் வாகனங்கள் உள்ளதா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, துணை தாசில்தார் சையது அலி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் சரிபார்ப்பு பணியினை கலெக்டர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Kanchipuram ,Kalachelvi Mohan ,Tiruppukuzhi ,Panchayat ,Collector ,Rahulnath ,
× RELATED தொழிற்சாலைகளில் பணிபுரியும்...