×

மாடிகளுடன் கூடிய 32 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம் கதறியபடி மறியலில் ஈடுபட்ட பெண்கள் வேலூர்- ஆற்காடு சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிரடி

வேலூர், ஆக.31: வேலூர் ஆற்காடு சாலையில் காகிதபட்டறையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என 32 கட்டிடங்களை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அதிரடியாக இடித்து அகற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. வேலூர் மாநகரில் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்தவிர மாநகராட்சி சாலைகளிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் என்பதற்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் வேலூர்- ஆற்காடு சாலை காகிதப்பட்டறை தொடங்கி சத்துவாச்சாரி வரை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரப்பகுதிகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமித்து வீடுகள், பலமாடி வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் அகற்றவில்லை.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு நெடுஞ்சாலையில் 32 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவை அனைத்தும் வணிக வளாகங்களாக பயன்பாட்டில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. எனவே, அந்த கட்டிடங்களுக்கு வழங்கப்பட்ட மின்இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாநில நெடுஞ்சாலைத்துறையும், வருவாய்த்துறையும் மின்வாரியம் மற்றும் மாநகராட்சிகளை கேட்டுக்கொண்டன. ஆனாலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற முன்வரவில்லை. எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறையும், வருவாய்த்துறையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கி சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கின.

தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் நேற்று காலை 7 மணியளவில் வேலூர் தாசில்தார் செந்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை மண்டல உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் வேலூர் காகிதப்பட்டறைக்கு வந்தனர். முன்னதாக அங்கு டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் (வடக்கு) சீனிவாசன், சத்துவாச்சாரி ரவி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ளவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதனால் 10க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதுடன், பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் தங்களை இங்கிருந்து வெளியேற்றக்கூடாது என்று கூறி கண்ணீர் விட்டு கதறியபடி சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை எச்சரித்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை பார்த்து மற்றவர்கள் தங்கள் கட்டிடங்களில் உள்ள பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். வீடுகளில் இருந்தவர்கள் தங்கள் அதை காலி செய்து விட்டு வேனில் தங்கள் பொருட்களை ஏற்றிச் சென்றனர்.

தொடர்ந்து முதலில் 2 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு 32 கட்டிடங்களை இடிக்கும் பணி காலை 9 மணியளவில் தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் கூடுதலாக பெரிய பொக்லைன் இயந்திரம் உட்பட 4 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கட்டிடங்களை இடிக்கும் பணி வேகமாக நடந்தது. நேற்று மாலை வரை 15க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. வேலூர் காகிதப்பட்டறையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடைபெறும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாடிகளுடன் கூடிய 32 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம் கதறியபடி மறியலில் ஈடுபட்ட பெண்கள் வேலூர்- ஆற்காடு சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : State Highways Department ,Vellore-Arcot road ,Vellore ,State Highway Department ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...