×

சிறுவனை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வந்தவாசி அருகே முன்விரோத தகராறில்

ஆரணி, ஆக. 31: வந்தவாசி அருகே முன்விரோத தகராறில் சிறுவனை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி குமாரி, இவர்களது மகன் வெங்கடேசன்(11) உள்ளனர். மேலும், குமாரின் தங்கை ஜெயக்கொடி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மலையாண்டியை திருமணம் செய்தார். மலையாண்டிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அப்போது, அவர் தனது மனைவியை அடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஜெயக்கொடி அருகில் உள்ள தனது அக்கா குமாரி வீட்டிற்கு சென்று நடந்ததை சொல்லி அழுதுள்ளார். இதனால், மலையாண்டியுடன் தனது தங்கை இருந்தால் அடித்து கொலை செய்து விடுவான் என்பதற்காக செய்யாறு அடுத்த பரந்தாங்கல் கிராமத்தில் உள்ள அவரது தாய்வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டுள்ளார். மேலும், மலையாண்டி தனது மனைவியை பிரித்த குமாரியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதனால், கடந்த 2011ம் ஆண்டு அவர்கள் ஊரில் நடந்த திருவிழாவின்போது, மலையாண்டி குமாரியின் மகன் வெங்கடேசனை சைக்கிளில் அழைத்துச் சென்று, அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து வாயில் துணியை கட்டி கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து, குமாரி வந்தவாசி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலையாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணை ஆரணியில் உள்ள ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதன்படி அந்த வழக்கு கடந்த 20ம் தேதி மீண்டும் மாவட்ட அமர்வு நீதிபதி கே.விஜயா முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது வழக்கின் தரப்புவாதத்தை அரசு வழக்கறிஞர் கே.ராஜமூர்த்தி வாதிட்டார். அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விஜயா வெங்கடேசனை கொலை செய்த வழக்கில் குற்றவாளி என முடிவு செய்து தண்டனை அறிவித்துள்ளார்.
அப்போது, மலையாண்டிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்புடன் ஆரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு மலையாண்டிக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துள்ளார். இதனால், மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா சென்னையில் அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கு நேற்று சென்று, குற்றவாளியான மலையாண்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்து, பின்னர், தீர்ப்பு நகலை அவரிடம் வழங்கினார். தொடர்ந்து, போலீசார் மலையாண்டியை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுவனை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வந்தவாசி அருகே முன்விரோத தகராறில் appeared first on Dinakaran.

Tags : Additional District Sessions Court ,Vandavasi ,Arani ,session court ,Dinakaran ,
× RELATED தொழிலாளியை அடித்துக்கொன்ற 2 பேருக்கு...