×

ரூ.87 ேகாடியில் மழைநீர் வடிகால் பணிகள் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி, ஆக. 31: தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார். கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரூ.87 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில்: மாநகாராட்டியில் மது இல்லாத வார்டு உருவாக்குவதற்காக 51வது வார்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மதுவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க வார்டு தோறும் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். பழைய மாநகராட்சி வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர், முன்னாள் நகராட்சி சேர்மன் பெரியசாமி ஆகியோரின் உருவச்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. ஒரு மாதமாக குப்பை அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. குப்பைகளை உடனடியாக அகற்ற பழைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அத்திமரப்பட்டி பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி பதிலளித்து பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் பெறப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, அதனை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பணி தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். மாநகராட்சி பகுதியில் மின்கம்பங்கள் உள்ள அனைத்து பகுதியிலும் விளக்குகள் அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தில் 1.20 லட்சம் இணைப்புகள் அனுமதிக்கப்பட உள்ளன. மாநகராட்சி பகுதியில் சுமார் 400 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 200 சாலை பணிகள் முடிக்கப்பட உள்ளன. இதனால் எந்த பகுதியிலும் மழைநீர் தேங்காது. திரேஸ்புரம் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. அதனை சரி செய்வதற்கான பணிகளும் திட்டமிடப்பட்டு உள்ளன, என்றார். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

பழைய பூங்காக்கள் சீரமைப்பு
மாநகராட்சியில் உள்ள அனைத்து பழைய பூங்காக்கள் சீரமைத்து பராமரிக்கப்படும். மாநகராட்சி சார்பில் கதிர்வேல் நகர் பகுதியில் 3.50 ஏக்கர் பரப்பில் கிரிக்கெட் மற்றும் கபடி விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் மேயர் ஜெகன்பெரியசாமி கூறினார்.

The post ரூ.87 ேகாடியில் மழைநீர் வடிகால் பணிகள் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Municipal ,Corporation ,Tuticorin ,Thoothukudi Corporation Ordinary Meeting ,Mayor ,Jaganperiyaswamy ,Dinakaran ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது