
கடையம்,ஆக.31: கடையம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் கலந்துரையாடியபடி உணவருந்தினார். பள்ளி குழந்தைகள் பலரும் காலையில் சாப்பிடுவதில்லை என்பதை கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலையில் உணவளிக்கும் திட்டத்தை தொடங்க முடிவு செய்தார். கல்வி கற்பதற்கு பசி ஒரு தடையாக இருக்க கூடாது என்பதே இந்த திட்டதின் நோக்கம் ஆகும். அதன்படி கடந்த 25ம் தேதி தேதி மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்து 8 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
இந்த திட்டம் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கடையம் ஒன்றிய பகுதிகளான முதலியார்பட்டி, பொட்டல்புதூர், வாகைகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் நேற்று காலை உணவு திட்டத்தை நேரில் திடீரென ஆய்வு செய்தார்.
காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா? என திடீரென சோதனை மேற்கொண்டார். தொடர்ந்து வாகைகுளத்தில் உள்ள பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய படி, காலை சிற்றுண்டி உணவு அருந்தினார். தொடர்ந்து கலைஞரின் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த மகளிர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். ஆய்வின் போது கடையம் யூனியன் ஆணையர் ராஜசேகர் மற்றும் ரவணசமுத்திரம் விஏஓ தர்மர், பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், மந்தியூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராகவேந்திரன், வார்டு உறுப்பினர் அஜித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கடையம் ஒன்றிய பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தென்காசி கலெக்டர் ஆய்வு மாணவர்களிடம் கலந்துரையாடி உணவு அருந்தினார் appeared first on Dinakaran.