×

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ₹77 லட்சத்தில் திருப்பணிகள் நிறைவு

நாமக்கல், ஆக.31: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ₹77 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நவம்பர் 1ம்தேதி கும்பாபிஷேகம் நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின், வரும் நவம்பர் 1ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஒரு ஆண்டாக, கோயிலில் திருப்பணிகள் நடந்து வந்தது. திருக்கோயில் நிதி ₹60 லட்சம் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட ₹17 லட்சம் என மொத்தம் ₹77 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கோயில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று மாலை கோயில் அலுவலகத்தில் அறங்காவல் குழுத் தலைவர் நல்லுசாமி தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி முன்னிலை வகித்தார். கோயில் உதவி ஆணையர் இளையராஜா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், அறங்காவல் குழுத்தலைவர் நல்லுசாமி கூறியதாவது: ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, திருப்பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். நகராட்சி நிர்வாகம் கும்பாபிஷேகம் நடைபெறும் அன்று, போதுமான அளவுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். லட்சகணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக தினத்தன்று நாமக்கல் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்வார்கள். அதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல் துறையினர் செய்து கொடுப்பார்கள். கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த, நகரில் உள்ள அனைத்து சேவை சங்கத்தினரும் தங்களது பங்களிப்பை அளிக்க தயாராக உள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளது. திருக்கோயில் மராமத்து பணி ₹33 லட்சத்திலும், கழிவறை மற்றும் குளியலறை மராத்து பணிகள் ₹11 லட்சத்திலும், விநாயகர் சன்னதி மராமத்து மற்றும் செப்பு தகடுகள் அமைக்கும் பணி ₹9 லட்சத்திலும், மின்மராமத்து பணி ₹4 லட்சத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தவிர பக்தர்கள் தங்கும் மண்டபத்துக்கு வர்ணம் பூசுதல், கோயில் முன்புறம் மங்களூர் ஓடு பதித்தல் போன்ற பணிகள் நடந்துள்ளது. இவ்வாறு அறங்காவல் குழுத்தலைவர் நல்லுசாமி தெரிவித்தார். இக்கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் பூபதி, தெற்கு நகர திமுக செயலாளர் ராணா.ஆனந்த், மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், நகர்மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், கலைச்செல்வி, சரவணன், நந்தினிதேவி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட திமுக தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜவேல், கோயில் அறங்காவல் குழு உறுப்பினர் செல்வ சீராளன், மாவட்ட அறங்காவல்குழு உறுப்பினர் அருள்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ₹77 லட்சத்தில் திருப்பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Namakkal Anjaneyar Temple ,Namakkal ,Kumbabhishekam ,Dinakaran ,
× RELATED முட்டை விலை 20 காசு குறைந்தது