×

வன்முறையை தூண்டும் பதிவு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் 4 பேர் மீது உபா வழக்குப்பதிவு: திரிபுரா போலீஸ் அதிரடி

அகர்தலா: வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்ட  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் 4 பேர் மீது திரிபுரா போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, கோயில்கள் இடிக்கப்பட்டன. இதை கண்டித்து திரிபுரா மாநிலத்தின் பனிசாகரில் விஸ்வ இந்து பரிஷத் கடந்த 26ம் தேதி பேரணி நடத்தியது. அப்போது, மசூதி மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான 3 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. அவை போலி புகைப்படங்கள் என்று தெரிவித்த மாநில அரசு, மசூதி எரிப்பு சம்பவம் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் 4 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை திரிபுரா சென்று ஆய்வு செய்தனர். பின்னர், திரிபுரா அசம்பாவிதம் குறித்த அதிருப்தி கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். மேலும், மசூதி, கடைகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், வன்முறையின் போது சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டனர். இவற்றை ஆய்வு செய்த திரிபுரா போலீசார், இந்த பதிவுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவர்கள் 4 பேர் மீதும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (உபா) வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து மேற்கு திரிபுரா எஸ்பி மாணிக் தாஸ் கூறுகையில், “உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் பதிவு அவர்களால் பதிவிடப்பட்டதா? அல்லது போலி கணக்கு மூலம் பதிவிடப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. மேலும், நவம்பர் 10ம் தேதிக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,’’ என்றார். …

The post வன்முறையை தூண்டும் பதிவு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் 4 பேர் மீது உபா வழக்குப்பதிவு: திரிபுரா போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : UBA ,Supreme Court ,Tripura Police Action ,Aggartala ,Tripura police ,Tripura ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு