×

ஓட்டலில் கெட்டுப்போன 5 கிலோ இறைச்சி பறிமுதல்

கடத்தூர், ஆக.31: கடத்தூரில் மளிகை மற்றும் ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், கெட்டுப்போன 5 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா வழிகாட்டுதலின்படி, மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், கடத்தூர் மற்றும் சில்லாரள்ளி, புளியம்பட்டி, நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், 2 கடைகளில் இருந்து செயற்கை நிறமேற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. 2 உணவகங்களில் இருந்து உரிய விபரங்கள் அச்சிடாத மசாலா பாக்கெட்டுகள் 2 கிலோ, பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 2 லிட்டர் மற்றும் செயற்கை நிறமூட்டி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கடைகளுக்கு தலா ₹1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்புத்துறை புகார் எண்ணில் பெறப்பட்ட புகார் அடிப்படையில், நத்தமேடு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கீழ்வீதி, மந்தை வீதி, மாரியம்மன் கோயில் பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 3 கடைகளில் உரிய விவரங்கள் அச்சிடாத குளிர்பான பாக்கெட்டுகள், காலாவதியான பாப்கார்ன் பாக்கெட்கள் மற்றும் விபரச்சீட்டு இல்லாத தின்பண்டங்கள், பிஸ்கெட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒரு டீக்கடையில் இருந்து தரமற்ற கலப்பட தேயிலை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

The post ஓட்டலில் கெட்டுப்போன 5 கிலோ இறைச்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kaduur ,Food Safety Department ,Dinakaran ,
× RELATED ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்