
- பிரக்ன நந்தா
- உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.
- சென்னை
- FIDE உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப்
- அஜர்பைஜான்
சென்னை: அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 2வது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை பாராட்டி ரூ.30 லட்சத்துக்கான காசோலை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். சர்வதேச செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, 3 வயது முதல் செஸ் விளையாட தொடங்கி, 5 வயது முதல் செஸ் தொடர்களில் பங்கேற்று வருகிறார். 10 வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்று இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2013ம் ஆண்டு 8 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 2015ம் ஆண்டு 10 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.
மேலும், 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற 2வது இளம் வீரர் என்ற சாதனையும், 16 வயதில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தி சாதனையும் படைத்துள்ளார். பிரக்ஞானந்தா, இளம் வயதில் இந்தியாவில் இருந்து உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். செஸ் கேண்டிடேட்தொடரில் விளையாட தேர்வாகி உள்ள 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரக்ஞானந்தா, பீடே செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று தனி வீரராகவும் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கமும் வென்றுள்ளார்.
அண்மையில் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்ற பீடே (FIDE) உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 2வது இடத்தை பெற்ற பிரக்ஞானந்தாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோகால் வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். மேலும், உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2வது இடத்தை பெற்று சாதனை படைத்து தமிழ்நாடு திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் சிறப்பான முறையில் செஸ் போட்டிகளில் சாதனை படைத்து வரும் பிரக்ஞானந்தாவை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உயரிய ஊக்கத்தொகையான ரூ.30 லட்சத்துக்கான காசோலை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி குழும தாளாளர் எம்.வி.எம்.வேல்முருகன், பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு, தாயார் நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
* ‘வரவிருக்கும் சவால்களிலும் வெற்றி பெறுங்கள்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு:
வெற்றியுடன் சென்னை திரும்பிய இளந்திறமையாளர் பிரக்ஞானந்தாவை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். பிரக்ஞானந்தாவின் சாதனைகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றன. பிரக்ஞானந்தாவுக்கு நினைவுப்பரிசும், ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகையும் வழங்கி சிறப்பித்தேன். விளையாட்டில் இளம் திறமையாளர்களை வளர்ப்பதற்கான நமது அரசின் உறுதிப்பாட்டை இத்தகைய நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன. இதே வேகத்தில் தொடர்ந்து சென்று, வரவிருக்கும் சவால்களிலும் வெற்றி பெறுங்கள், பிரக்ஞானந்தா என கூறியுள்ளார்.
* அரசு சார்பில் பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு
உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா அஜர்பைஜானில் இருந்து கத்தார் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று காலை 9:30 மணிக்கு சென்னை திரும்பினார். அவருக்கு மேளதாளங்கள் முழங்க, மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் என தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அதிகாரிகள் சால்வைகள், மலர் கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். அதோடு சென்னை விமான நிலைய அதிகாரிகள், செஸ் விளையாட்டு வீரர்கள், மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவரும் அவரை வரவேற்றனர். பிரக்ஞானந்தா திறந்த காரில் ஏறி நின்று அனைவரது வரவேற்பையும் பெற்றார். ‘எனக்கு அளிக்கப்பட்ட இந்த சிறப்பான வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பிரக்ஞானந்தா கூறினார்.
The post உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2வது இடம் பிடித்து சாதனை பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.