×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது? ஐகோர்ட்டில் விளக்கம் கேட்க உத்தரவு

சென்னை: சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பார்த்த நீதிபதி, ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என்றார். இதையடுத்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை பரிசீலித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த மனுவை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க முடியாது. எம்பி, எம்எல்களுக்கான சிறப்பு நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவசர அவசரமாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணிகுமார் ஆகியோர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி, அமலாக்கத் துறையின் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாட உள்ளது.

* ‘யாரையும் அனுமதிக்க முடியாது’
செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி முறையீடு செய்ய எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணிகுமார் ஆகியோர் நீதிபதி ரவி முன்பு முறையிட்ட போது, செய்தியாளர்கள் யாரும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர், முறையீடு முடிந்த பிறகு மேற்கொண்டு நீதிமன்றத்தில் நடைபெற உள்ள வழக்கின் விசாரணைகளை நேரில் காண அனுமதிக்கக்கோரி செய்தியாளர்கள் நீதிபதி ரவியிடம் அனுமதி கேட்டனர். ஆனால், யாரையும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது? ஐகோர்ட்டில் விளக்கம் கேட்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Chennai ,Minister ,Senthil Balaji ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்