×

குமரியில் பரபரப்பு: பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த பா.ஜ கவுன்சிலர்

களியக்காவிளை: பெண்ணின் வயிற்றில் காலால் எட்டி உதைத்த பாஜ கவுன்சிலரின் வீடியோ வைரலாகி வருகிறது. குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சபிமோள். 2 பேருக்கும் இடையே இட பிரச்னையால் தகராறு இருந்து வருகிறது. இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்குமாறு சபிமோள், மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார், முன்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் ஆகியோரை அழைத்து இருந்தார். அதன்படி மெதுகும்மல் ஊராட்சித் தலைவர் சசிகுமார் மற்றும் முன்சிறை ஊராட்சி ஒன்றிய பாஜ கவுன்சிலர் சாவர்க்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது
சரோஜா மற்றும் சபிமோள் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.

அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர், சரோஜாவின் வயிற்றில் காலால் எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சரோஜா காயம் அடைந்தார். இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதை அறிந்த சாவர்க்கர் மற்றும் சசிகுமார் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர். காயமடைந்த சரோஜாவை மீட்டு அவரது உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவம் குறித்து சரோஜா களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சபிமோள், சசிகுமார், சாவர்க்கர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் சபிமோள் தரப்பிலும், சரோஜா தன்னை தாக்கி விட்டதாக புகார் செய்யப்பட்டது. அந்த புகாரையும் பெற்றுக்கொண்ட போலீசார் சரோஜா மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பாஜ கவுன்சிலர் சாவர்க்கர் சரோஜாவின் வயிற்றில் காலால் எட்டி உதைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ் ஆப் உள்பட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post குமரியில் பரபரப்பு: பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த பா.ஜ கவுன்சிலர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kaliakavilai ,Kumari district ,Kumari ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்:...