×

நள்ளிரவில் இயங்கி வந்த நாகர்கோவில் – மங்களூர் ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்த முடிவு: தண்டவாள பராமரிப்பு பணிக்காக நடவடிக்கை

நாகர்கோவில்: தண்டவாள பராமரிப்பு பணிக்காக நாகர்கோவில் – மங்களூரு இடையே இயங்கி வந்த ஏரநாடு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்துடன் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஒரிசாவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு பிறகு ரயில்வே வாரியம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி ரயில்கள் இயக்கப்படாமல் இருக்கும் நேரத்தை கண்டறிந்து அந்த காலகட்டத்தை காரிடார் பிளாக் என்று அறிவித்து அந்த நேரத்தில் ரயில் பாதையில் உள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். ஒரிசா ரயில் விபத்துக்கு பிறகு ரயில்வே வாரியம் இந்த காரிடார் பிளாக்கை அதன் கால அளவை அகில இந்திய அளவில் அதிகரித்துள்ளது. இதற்காக தெற்கு ரயில்வேயில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள ரயில்களின் கால அட்டவணை மாற்றம் செய்து வருகிறது. அதன்படி திருவனந்தபுரம் கோட்டத்திலும், தண்டவாள பராமரிப்புக்காக ரயில்கள் இயக்கும் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில், நாகர்கோவில் – திருவனந்தபுரம் மார்க்கத்தில், நாகர்கோவில் – மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் நடு இரவு நேரத்தில் இயங்குகிறது. தண்டவாள பராமரிப்புக்கான காரிடார் பிளாக் பணிக்காக தற்போது, எரநாடு எக்ஸ்பிரசை இனி திருவனந்தபுரத்துடன் நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கொச்சுவேலி- மங்களூருக்கு இடையே இயங்கி வந்த எரநாடு (16605/16606) ஒரு பகல் நேர ரயில், வாரத்திற்கு 3 நாட்கள் செல்லதக்கும் வகையில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் அதிகாலை கொச்சுவேலியிருந்து இயக்கப்பட்டு வந்த காரணத்தால் திருவனந்தபுரம் நகரத்தில் உள்ள பயணிகளுக்கு எந்த பயனும் இல்லாமல் இருந்தது. இதை திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு வந்து செல்ல வைப்பதற்காக, ஜனவரி-2010 ல் நாகர்கோவில் வரை நீட்டிக்க செய்தனர். இவ்வாறு நீட்டித்த ரயில் அந்த ஆண்டே தினசரி ரயிலாக மாற்றியமைக்கப்பட்டது.

இவ்வாறு அறிவிக்கப்பட்ட அந்த ரயில் தினமும் அதிகாலை 2.15க்கு, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் நள்ளிரவு 11.20க்கு நாகர்கோவில் வந்தடையும். கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படாத வகையில் நள்ளிரவில் இயங்குவதால், இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும் அதன் வருவாய் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து மாலை நேரத்தில் மங்களூருக்கு இயக்கப்படும் மூன்று ரயில்களில் ஒரு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். ஆகவே இந்த நாகர்கோவில் – மங்களூர் ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தம் செய்யும் போது அதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்தபுரம் – மங்களூர் ( விரைவு வண்டி எண் 16347/16348) ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு நீட்டிப்பு செய்தால் மட்டுமே இந்த ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் டவுண், திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூர்க்கு செல்லும் ரயில் நடு இரவு நேரத்தில் மிகவும் வருவாய் குறைந்து நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இயங்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் காரிடார் பிளாக் பாதிப்படைகிறது. ஆனால் இந்த ரயில் நிறுத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாகர்கோவில் – மங்களூர் ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தியது போல இந்த திருநெல்வேலி – பிலாஸ்பூர் ரயில் கொச்சுவேலியுடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் இரண்டு நாட்கள் காரிடார் பிளாக் பாதிப்படையாது. இந்த ரயிலை கொச்சுவேலியுடன் நிறுத்தம் செய்வதற்கு பதிலாக கொச்சுவேலியில் இருந்து கொல்லம், எர்ணாகுளம், மங்களூர், கோவா, மும்பை வழியாக கொங்கன் பாதையில் செல்லும் கொச்சுவேலி போர்பந்தர் அல்லது கொச்சுவேலி – இந்தூர் ஆகிய ரயில்களில் ஏதேனும் ஒரு வாராந்திர ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த ரயில்கள் திருநெல்வேலி ஜாம்நகர் செல்லும் கால அட்டவணையில் தான் இயக்கப்படுகிறது குறிப்பிடதக்கது. இவ்வாறு இயக்கும் போது குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் மும்பை செல்ல கூடுதல் ரயில் சேவை கிடைக்கும். ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

 

The post நள்ளிரவில் இயங்கி வந்த நாகர்கோவில் – மங்களூர் ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்த முடிவு: தண்டவாள பராமரிப்பு பணிக்காக நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Mangalore ,Eeranadu ,Thiruvananthapuram ,Nagargo ,Eeranadu Express ,Nagarko- ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்