×

அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை: கீழடியில் கனிமொழி எம்பி பேட்டி

திருப்புவனம்: ‘ஒன்றிய தொல்லியல் துறை நடத்திய 3 கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களையும் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கீழடியில் கனிமொழி எம்பி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்பி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சின்ராஜ், நரேந்திரகுமார், தலாரி ரங்கையா, கீதாபென், வஜெசிங்பாய்ரத்வா, முகமது அப்துல்லா, ராண்ணா கடாடி, அஜய்பிரதாப் சிங் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். கீழடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பின் முதன்முறையாக கனிமொழி எம்பி வந்திருந்தார். அவரை சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித், தொல்லியல் துறை ஆணையாளர் (பொ) சிவானந்தம், கீழடி பிரிவின் இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய், காவ்யா ஆகியோர் வரவேற்றனர்.

அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அகழாய்வு தளங்கள் குறித்த வரைபடத்தை பார்வையிட்ட பின் மினி தியேட்டரில் கீழடி குறித்த ஆவணப்படத்தை எம்பிக்கள் குழு பார்வையிட்டது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பானைகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள், பாசிகள், குறியீடுகள் உள்ளிட்டவற்றை கனிமொழி எம்பி தலைமையிலான குழு பார்த்து ரசித்தனர். பின்னர் கனிமொழி எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கீழடியில் அகழாய்வு செய்வதற்கே நீண்ட போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. தமிழகத்தின் தொன்மையையும், பெருமையையும் இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அருங்காட்சியகம் மூலம் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, தொழில், விவசாயம் உள்ளிட்டவற்றை காண முடிகிறது. ஒன்றிய தொல்லியல் துறை நடத்திய முதல் மூன்று கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களையும் இங்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய தொல்லியல் துறை அகழாய்வின் அறிக்கையையும் வெளியிட நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்’’ என்றார். பின் அருங்காட்சியகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு புடைப்புசிற்பத்தின் முன்பு நின்று அவர் செல்பி எடுத்து கொண்டார்.

The post அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை: கீழடியில் கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Department of Archaeology ,
× RELATED ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல்...