×

12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து தியானம் கேதார்புரியில் ரூ.400 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல்: பிரதமர் மோடி நாட்டினார்

டேராடூன்: உத்தரகாண்டின் கேதார்நாத்தில் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆதி குரு சங்கராச்சாரியார்  சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மேலும், கேதார்புரியில் ரூ.400 செலவிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். உத்தரகாண்டில் கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் கேதார்நாத் கோயில் சேதமடைந்தது. மேலும், கோயில் அருகில் இருந்த ஆதி குரு சங்கராசாரியார் சமாதி, சிலையும் அடித்து செல்லப்பட்டது. இந்த சேதங்களை சீரமைப்பதற்கான பணி, கடந்த 2019ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இதில், புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி உயரமும், 35 டன் எடையும் கொண்ட ஆதிசங்கரர் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர், அங்கு திரண்டு இருந்த பக்தர்களிடையே பேசிய அவர், ‘‘ஆதி சங்கரர் சிலை முன் அமர்ந்திருந்தபோது என்ன உணர்ந்தேன் என்பதை கூற வார்த்தைகள் கிடையாது. சில அனுபவங்கள் உன்னதமானவை. அவற்றை விவரிக்க வார்த்தைகள் இல்லை,” என்றார். முன்னதாக, நேற்று காலை டேராடூன் வந்த பிரதமர் மோடி, கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர், 2013ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது மலையில் இருந்து உருண்டு வந்து கோயிலுக்கு அரணாக நின்று, கோயிலை பேரழிவில் இருந்து பாதுகாத்ததாக நம்பப்படும் ‘பீம் ஷீலா’ எனப்படும் மிகப்பெரிய பாறையை பார்வையிட்டார். தொடர்ந்து, கேதார்புரியில் ரூ.400 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ‘‘2013ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின், மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்குவது சாத்தியமற்றதாக தோன்றியது. ஆனால், பாபா கேதார் மீது எனக்கு இருந்த நம்பிக்கையும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்ச்சை மீண்டும் கட்டியெழுப்பிய அனுபவமும், அது சாத்தியம் என நம்பவைத்தது. கேதார்புரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், இமயமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும். இந்த நூற்றாண்டு உத்தரகாண்டுக்கு சொந்தமானது. வரும் ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்த பகுதியில் மேம்பாட்டு பணிகள் அதிகரிக்கும். மக்கள் மலையில் இருந்து இடம் பெயர்வது நிறுத்தப்படும்,” என்றார்.* ராணுவ உடை அணியலாமா?பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, அவரும் ராணுவ வீரர்களின் உடையை அணிவது வழக்கம். 2017ம் முதல் இப்படி செய்து வருகிறார். நேற்று முன்தினமும் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷோரா பகுதியில் ராணுவ வீரர்களுடன் அவர் ராணுவ உடை அணிந்து தீபாவளியை கொண்டாடினார். இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எந்த குடிமகனாவது அல்லது ராணுவத்தில் இல்லாத ஒருவர் ராணுவ சீருடையை அணியலாமா? இதற்கு ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார். கடந்த காலங்களிலும் மோடியை இதுபோல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.   * பாஜ தலைவர்கள் சிறைபிடிப்புகேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நேரடி ஔிபரப்பை காண்பதற்காக, அரியானா மாநிலம், ரோடக் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு பாஜ மூத்த நிர்வாகிகளும், இம்மாநில முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவரும் நேற்று காலை சென்றனர். இவர்களை நூற்றுக்கணக்கான விவசாயிகள் சிறை பிடித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய பிறகே, பல மணி நேரத்துக்குப் பிறகு விவசாயிகள் அவர்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்….

The post 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து தியானம் கேதார்புரியில் ரூ.400 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல்: பிரதமர் மோடி நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Kedarpuri ,Adi Shankar ,Dehradun ,Adi Guru Shankaracharya ,Uttarakhand ,Kedarnath ,
× RELATED சொல்லிட்டாங்க…